
விளக்கு வைப்பது:
மாப்பிள்ளையை அழைத்து பெண் வீட்டிற்குள் கூட்டி வரும்போது நடுப்பத்திக் கோலத்தின் முன் நிற்க வைத்து பெண்ணின் அப்பத்தாள் அல்லது அத்தை வந்து ஆரத்தி எடுத்து விபூதி பூசி, மாப்பிள்ளையை நடுவாசலில் கிழக்கு முகமாக உட்கார வைப்பார்கள்.
பகவத்யானமும் காப்புத் கட்டுதலும்:
திருமண வாழ்வு சிறக்க இறைவனை எண்ணி வழிபடுதலே பகவத்யானம். மணமகனுக்கு முதலிலும் மணமகளுக்குப் பிறகும் தனித்தனியே புரோகிதர் ஒருவர் சங்கல்பம் செய்துவைத்து கணபதி பூஜை செய்வார். பிறகு தாய் மாமன், மணிக்கட்டில் ஒரு சிறு வெள்ளி நாணயத்தை (தற்போது 50 காசு) சிகப்புத் துணியில் முடிந்து நுனி உடையாத விரலி மஞ்சளையும் சேர்த்துக் கட்டிவிடச் செய்வார்.
திருப்பூட்டுதலுக்கு ஆசீர்வாதம் வாங்குதல்:
இருவருக்கும் காப்புக்கட்டி முடிந்ததும் மணமகன் வீட்டிலிருந்து கொண்டுவந்த தாம்பளத்தில் உள்ள திருமாங்கல்யத்திற்கு (கழுத்துரு) இலட்சுமி பூஜை செய்து மணமகளுடைய தாய்மாமனும் அவர்தம் மனைவியும் வீட்டுப் பெரியவர்களிடம் காட்டி வாழ்த்துப் பெற்று நடுவீட்டில் கொண்டுபோய் வைத்துவிடுவார்கள். மணமக்கள் இருவருக்கும் பகவத்யானமும், காப்புக்கட்டுதல் நடைபெறும்பொழுது அவரவர்கள் வீட்டுப் பெரியவர்கள், சுற்றத்தார்கள் அவர்களைப் பூமணம் இட்டு வாழ்த்துவார்கள்.
பூமணம் இடுதல்:
பகவணம் செய்யும்போது மலர்களை பசும்பாலில் நனைத்து மணமக்கள் உடலில் மணிக்கட்டு, முழங்கை, தோள்பட்டை ஆகிய மூன்று இடங்களிலும் தொட்டு வாழ்த்துதலே பூமணமாகும். இதை மூன்று முறை செய்யவேண்டும். முதலில் மாமக்காரர்தான் செய்யவேண்டும். அதேபோல் மாமக்காரர்தான் முடித்து வைக்கவேண்டும். மணவறையிலும் பூமணம் இடவேண்டும்.
அரிமணம் இடுதல்:
முளைப்பாலிகை கிண்ணங்கள் ஐந்திலிருந்தும் முளைவிட்ட தானியங்களைக் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப்போட்டு வாழ்த்துதல் அரிமணமாகும். பகவணத்தின் போது மணமக்கள் இருவருக்கும் அரிமண இடுதல் நடைபெறும். பின்னர் மணவறையின் போதும் தம்பதிகளுக்கு எல்லோரும் அரிமணம் இடுவார்கள்.
திருப்பூட்டுதல்:
மணமகளுக்கு, மணமகனின் வீட்டார் கொண்டுவந்த ஆடைகளை அணிவித்து நன்கு அலங்கரித்து மணமேடை மீது கிழக்கு முகமாக நிற்கச் செய்வார்கள். பின்னர் மணமகனை அழைத்து மணமகளுக்கு எதிரே நிற்கச் செய்வர். மணமகளின் கைகள் இரண்டையும் ஏந்தச் செய்து அதில் பச்சரிசி, தேங்காய் முதலியவற்றைக் கொடுப்பார்கள். தேங்காயின் குடுமிப்பகுதி மணமகனை நோக்கி இருக்கவேண்டும். மணமகன் கோவிலில் இருந்து வந்துள்ள திருநீற்றை, தான் பூசிக் கொண்டு, மணமகள் நெற்றியிலும் பூசவேண்டும். பிறகு கோவில் மாலையை மணமகள் கழுத்தில் அணிவிக்க வேண்டும். பின்பு பெரியவர் ஒருவர் துணையுடன் அவர் எடுத்துத் தருகின்ற கழுத்துருவை வாங்கி மேல்பாகத்தில் திருமாங்கல்யம் உள்ள பகுதி வருமாறு பெண்ணுக்கு அணிவித்துக் கழுத்தின் பின்புறம் மூன்று முடிச்சு போடவேண்டும். முதல் இரண்டு முடிச்சுக்களை மாப்பிள்ளையும் மூன்றாவது முடிச்சை நாத்தனாரும் போடுவது மரபு. பிறகு தாலியை அணிவிக்க வேண்டும். அதன் பின்னர் திருமாங்கல்யத்திலும் மூன்று முடிச்சுகளின் மீதும் சிறுதாலியிலும் மஞ்சள் தொட்டு வைத்து குங்குமம் இடவேண்டும்.
மணமகள் கையில் உள்ள பச்சரிசி, தேங்காய் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்துவிட்டு, மணமக்கள் இருவரும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்ளவேண்டும். மணமகன்தான் முதலில் மாலையிட வேண்டும். பிறகு தம்பதிகள் ஒருவருக்கொருவர் இனிப்பை பரிமாறிக் கொள்வது இன்றைய வழக்கம்.
திருப்பூட்டி முடிந்ததும், மணமக்கள் மாமக்காரருடன் வளவு, முகப்பிலுள்ளவர்களிடம் போய் வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.
திருப்பூட்டுதலின் போதும், மாலைமாற்றும் போதும் கெட்டிமேளம் வாசிக்கச் சொல்லவேண்டும். பிறகு அனைவருக்கும் ரொட்டி, மிட்டாய், சர்பத் கொடுக்கவேண்டும்.
திருப்பூட்டும் முறைகள்:
நகரத்தார் திருமணங்களில் திருப்பூட்டுதல் மூன்று விதமாக நிடைபெறுகிறது. மேலவட்டகை எனப்பெறும் வலையபட்டி, மேலைச்சிவல்புரி, குழிபிறை ஆகிய பகுதிகளில் மாப்பிள்ளை மணையில் நிற்க, பெண் கீழே நிற்க திருப்பூட்டப்படுகிறது. கீழ்வட்டகை எனப்பெறும் காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர் ஆகிய பகுதிகளில் பெண் மணைமீது நிற்க, மாப்பிள்ளை கீழே நிற்க திருப்பூட்டப்படுகிறது. தெற்கு வட்டகை எனப் பெறும் நாட்டரசன் கோட்டை, ஒக்கூர், அலவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் அறைக்குள் மாப்பிள்ளையும் பெண்ணும் சரிசமமாக நின்று திருப்பூட்டுதல் நடைபெறுகிறது.
இசைவு பிடிமானம் எழுதுதல்:
இசைவு பிடிமான புத்தகங்கள் அச்சிடப்பட்டு கிடைக்கின்றன. அதில் தனித் தனியே இருதரப்பாரும் அவரவர்கள் கோவில் பிரிவுகள் விவரத்தினைப் பங்காளியைக் கொண்டு எழுதி மணமக்களின் தந்தைமார்கள் இருவரும் நடுவீட்டில் அமர்ந்து கையெழுத்துச் செய்து, மாப்பிள்ளை வீட்டார் எழுதியது பெண் வீட்டிலும் பெண் வீட்டார் எழுதியது மாப்பிள்ளை வீட்டிலும் இருக்கும்படியாக மாற்றிப் பெற்றுக் கொண்டு, வைத்துக் கொள்ள வேண்டியது. இதில் எழுதிய பங்காளிகளும் கையொப்பம் இடவேண்டும்.
No comments:
Post a Comment