Tuesday, April 18, 2017

செட்டிநாடு தாலாட்டு ...

செட்டிநாடு தாலாட்டு ...
வட்டகைகள் தோறும் வந்திருக்கும் நாமெல்லாம்
செட்டிக் குலத்தார்கள், திருப்பணிக்கே பிறந்தவர்கள்
பட்டினத்தார் நம்முடைய பாட்டையா: அவரிட்ட
தொட்டிலிலே துரைமகனைத் தொடர்ந்தாட்ட வந்துள்ளேன்
கடலலையே தாலாட்டும்; காவிரியும் சீராட்டும்
உடனசையும் தென்னை மடல்விரித்து சோறூட்டும்
இடையிலென் பாட்டெதற்கா? இடைமருதூர்ப் பிள்ளையவன்
கடைவிழியாற் கேட்கின்றான் கண்வளரப் பாடுகிறேன்
என்னூரார் முன்னோராம் இராமநாதப் பெரியாராம்
மின்வயிரப் பாட்டாம் மேலான தொட்டிலிட்டுக்
கண்மணியாம் மருதீசர் கண்வளரப் பார்த்திருந்தார்
அன்னாரின் அடிபற்றி அவரூரேன் பாடுகிறேன்
ஆறு குழந்தைகளை அடுத்தடுத்துப் பெற்றதனால்
மாறாமல் தாலாட்டை மனையில் பழகியதால்
நூறுமைல் தாண்டிவந்து நோன்பிருந்து பெற்றவனை
ஆராரோப் பாடிவிழி அயர்விக்க வந்துள்ளேன்.
பேச்சும் கவியாகப் பேசுகிற நம்குலத்தின்
ஆச்சிகளின் தாலாட்டை அடுத்திருந்து கேட்டதனால்
பூச்சூடி முடிக்காமல் புடவையிடை கட்டாமல்
பாச்சூடி மருதீசர் பரம்பரைநான் பாடுகிறேன்
ஆத்தா மீனாட்சி அடியேனைத் தொட்டிலிட்டுக்
கோத்தமலர்த் தாலாட்டின் குரலின்னும் கேட்பதனால்
நாத்தடமாம் நரம்பாலே நல்லிதய வீணையிலே
பூத்த இசைமீட்டிப் பொன்மகனைப் பாடுகிறேன்
சீரங்கம் ஆடித் திருப்பாற் கடலாடி
வாரங்கா எனவேண்ட வந்துதித்த அப்பச்சி
ஈரங் காணாமல் என்விழியை வளர்த்ததனால்
ஓரம் ஒதுங்காமல் உள்வளவில் பாடுகிறேன்
பண்ணெடுத்து நானிங்கே பாட முயல்வேனேல்
கண்ணெடுத்து மருதீசர் காலெடுத்து நடந்திடுவார்
பொன்னெடுத்துத் தந்திடுவார் போதுமெனக் கெஞ்சிடுவார்
என்னடுத்து மகன்வருவான் இசையோடு பாடிடுவான்
என்மைந்தன் பாடுவதை எல்லாரும் உறங்காமல்
கண்விழித்துக் கேளுங்கள் கைதட்டிப் போற்றுங்கள்
பொன்னி நதிபோலப் பொங்கு கடல்போலப்
பொன்கொழித்தே எல்லோரும் புகழ்கொழித்து வாழியரோ
- பூச்சரம் அக்டோபர் ‘2007 இதழில் வெளிவந்தது

Monday, April 17, 2017

திருமூலர் - "திரு மந்திரம்"


இளமையை நீட்டிக்கும் ஆரோக்கியத்தை தக்க வைக்கும்... திருமூலரின் எளிய வழிமுறைகள்..!
"உணவே மருந்து" என்பது அந்தக் காலம். "மருந்தே உணவு" என்பது இந்தக் காலம். ஒரு பக்கம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் எத்தகைய கொடுமையான நோயையும் குணப்படுத்தமுடியும் என்னும் நிலை உள்ளது. மறு பக்கம் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நோயை நீக்கி இன்பத்தைப் பெறுவதற்கு என்ன செய்யலாம் ? என்றும் இளமையோடு வாழவும், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கவும் திருமூலர் கூறும் எளிய வழியைப் பின்பற்றலாம்.
திருமூலர், முதலில் உடம்பைக் குற்றமுடையது என்று எண்ணியிருந்தார். பின்பு இறைவன் குடியிருக்கும் கோயில் தான் உடம்பு என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வைப் பெற்றதாக அவரே கூறியிருக்கிறார். மருத்துவமுறை, பார்வதி தேவி பரமசிவன் மூலம் நந்தி தேவருக்கு சொல்லப்பெற்று, அவர் மூலம் திருமூலருக்கு சொல்லப்பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றது. சரி, நோய் மற்றும் மருத்துவமுறையைப் பற்றி திருமூலர் கூறுவதைக் காண்போம்...
* உடலில் உயிர் இருக்க வேண்டுமென்றால் புணர்ச்சியைக் குறைத்து உணவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். "அளவான உணவு" என்பது, உணவு அரை வயிறு, நீர் கால் வயிறு மற்றும் காற்று கால் வயிறு என்பதே அந்தக் கணக்கு .
* மாலை வேளையில் யோகம் பயின்றால் உடலிலுள்ள கபம் அகலும். மதிய வேளையில் யோகம் பயின்றால் கொடிய வாதம் நோய் நீங்கும்.காலை வேளையில் யோகம் பயின்றால் உடலிலுள்ள பித்தம் நீங்கும் நரை, திரை மாறும்.உடம்பில் வாதம் மிகுந்தால், எரிச்சல் உண்டாகும். கை, கால், விலாச் சந்து, இடுப்புச் சந்துகளில் மிகுதியான வலி ஏற்படும் என்று கூறியுள்ளார்.யோகத்தை முறையாகப் பயின்றால் வாதம் பித்தம் , சிலேத்துமம் சமப்பட்டு, உடல் இளமை பெறும் என்பதைத் திருமந்திரத்தில் கூறியுள்ளார்.
*சுவாசம் வாய் வழியாக வந்தால் அது மரணத்திற்கான அறிகுறி. சுவாசம் ஆழமானதாகவும் நீளமானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதற்குச் சிறந்த வழி பிராணாயாமம். அதாவது , "பிராணனைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்துதல்" என்று பொருள். மூச்சுக்காற்றின் இயக்கத்தை நெறிப்படுத்தி இயக்குவதன் மூலம் ஆயுளைக் கூட்டியும், குறைத்தும் மாற்றி நிறுத்த முடியும். மூச்சுப்பயிற்சியில் தேர்ந்தவர்களின் முகம் மலர்ந்திருக்கும், மனம் லேசாகும்,கண்களில் ஒளி இருக்கும்
பிராண இயக்கத்தைக் கொண்டே ஆயுள் கணக்கிடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு விரற்கடையளவு சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் அதற்கேற்ப குறையும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 80 ஆண்டுகள் வாழலாம்.
ஏழு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 62 ஆண்டுகள் வாழலாம்.
எட்டு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 50 ஆண்டுகள் வாழலாம்.
ஒன்பது விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் முப்பதாகும்.
10 விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் 28 ஆண்டுகள் ஆகும்.
15 விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் இருபத்தைந்து.
*திருமூலர், கருவின் தோற்றம், வளர்ச்சி, ஆண் பெண் குழந்தைப் பிறப்பு, ஊனத்துடன் குழந்தைப் பிறப்பதற்கான வாய்ப்பு முதலிய செய்திகளையும் திருமந்திரத்தில் கூறியுள்ளார். உதாரணமாக, உறவின் போது ஆணிடம் சுவாசம் வலப்பக்கம் இருக்குமாயின் குழந்தை ஆணாக இருக்கும். ஆணிடம் சுவாசம் இடப்பக்கம் இருக்குமாயின் பெண் குழந்தைப் பிறக்கும். ஆண் பெண் இருவருக்கும் நல்ல முறையில் சுவாசம் ஓடினால் அழகான, அறிவான குழந்தைப் பிறக்கும் இதுபோன்றக் கருத்தை இப்பாடலில் கூறியுள்ளார்.
"குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் "
தாய் வயிற்றில் மலம் மிகுந்தால், குழந்தை மந்தமாகப் பிறக்கும்.
"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
அவர் கூறும் கருத்தில் எத்தகைய உண்மை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
* மேலும் உடலிலுள்ள வாயுக்களில் ஒன்றான "தனஞ்சயன்" என்னும் வாயுவினால் கால்வாதம், கூன், சிரங்கு முதலான நோய்கள் உருவாகும். "கூர்மன்" என்னும் வாயுவினால் கண்ணில் வீக்கம், பூ விழுதல் போன்ற கண் நோய்கள் வரும் என்றும் கூறியுள்ளார்..
திருமந்திரத்தில் குறிப்பிடாத மருத்துவக் குறிப்புகளே இல்லை. இதை மனதில் நிறுத்தி "திரு மந்திரம்" போன்ற பொக்கிஷ நூல்களைப் போற்றிப் பாதுகாப்பதுடன், நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.

Sunday, April 16, 2017

பேழை பெட்டி ....!


No automatic alt text available.

பேழை பெட்டி ....!
இது பொருட்களை பேணி பாதுகாக்க பயன்படுத்தப்படுவதால் பேழை எனப்படுகிறது இதனை தமது இனப் பண்பை கலாசாரத்தை குடும்ப உறவுகள் கட்டுமானத்தை பேணி பாதுகாக்க நகரத்தார் இனம் பயன் படுத்துகிற விதம் மிக அழகானது
ஒரு வளவுக்குள் இருக்கும் ஐயாக்கள் வீட்டினர் தம் முன்னோர்களின் நினைவான பொருட்களை இதனுள் வைத்து பாதுகாப்பார் ஆண்டுக்கு ஒருமுறை கூடி முன்னோர்கள் நினைவாக புதிய துணிமணிகள் எடுத்து உணவு வகைகள் பல செய்து பேழைப் பொருட்களை வெளியிலெடுத்து அதனுடன் வைத்து படைத்து வணங்குவர்
வணங்கியபின் புதிதாக எடுத்த துணிமணிகள் ஏற்கனவே உள்ள நினவுப்பொருட்கள் ஆகியவற்றை பேழையில் வைத்து கட்டி சுவாமி வீட்டினுள் வைத்துவிடுவர் இது மீண்டும் அனைவரும் ஒன்றுகூடிதான் பிரிக்க வேண்டும் என்பது மரபு
இத்தகைய படைப்பு பேழைகள் வளவு ,ஊர் ,சில ஊர்கள் சேர்ந்து என இருக்கின்றன குலத்தில் தோன்றிய கன்னி பெண்கள் வாழ்வரசிகள் பேர்பெற்றமூத்தோர் குலதெய்வங்களுக்கும் பொதுவில் படைப்பு பேழைகள் இருக்கின்றன
எத்தகைய பிணக்குகள் உறவுகளுக்குள் இருந்தாலும் ஒன்று கூடியே பிரிக்க வேண்டும் என்பது மரபாக இருப்பதால் படைக்க விரும்புவோர் பிணக்கு மறந்து கூடி படைப்பர் அச்சமயத்தில் பிணக்கு மாறி இணக்கம் எற்பட வாய்ப்பு பிறக்கிறது குடும்பங்கள் ஒன்று சேர்கிறது
இப்பொழுது வளவு பேழைகள் பேணப்படாமல் பெரும்பாலும் ஆற்றில் விடப்பட்டுவிட்டது ஆற்றில் விட்டது பேழை மட்டுமல்ல வளவு ஒற்றுமைக்குறிய வாய்ப்பையும்தான் ஊர்,பலஊர் படைப்பு பேழைகள் மட்டும் பேணப்படுகின்றன
உறைவை கட்டிவைத்த வளவு பேழைகளும் மீண்டும் கட்டப்படட்டும் வளவுகளும் இடிபடாமல் புதிப்பிகப்படட்டும் மரபு முன்னோர் அருளால் காக்கப்படும்

எங்கள் ஆயா......!!

எங்கள் ஆயா......!!
ஆத்தா அப்பச்சி அப்பத்தா ஆயா
அயித்த அம்மான் ஐயா என
நகரத்தார் உறவுகள் 
எத்தனையோ இங்கிருக்க
அனைத்து உறவுகளையும்
அனுசரிக்கும் ஆயாவை
கவிஎழுதி வருணிக்கும்
சிறுமுயற்சி இதுவென்பேன்
கருவிலே நான்தூங்கி
காலம் கழிக்கையிலே
கண்ணும் கருத்துமாய்
கருவளர காத்தவளே
ஆத்தா என்னை பொறந்தள்ள
ஆதரவாய் இருந்தவளே
அங்கமெல்லாம் நொந்தவள
அருகிருந்து பார்த்தவளே
பச்சஉடம்புக்காரி உன்மகளுக்கு
பத்தியமா சமைச்சவளே
பச்சபுள்ள நான்தேறிவர
பக்குவங்கள் சொன்னவளே
பசிக்குநான் அழுகையில
பக்குவமா பால்கொடுக்க
ஆத்தாளுக்கு பழகிகொடுத்த
அன்பான ஆயாளே
பால்குடிச்சும் நான் அழுதா
பூச்சி கடிச்சோ, வயிறு வலிச்சோ
மப்பு தட்டுச்சோ, மடிதான் தேடுச்சோ
என்றெல்லாம் பதரிடுவா அன்பான என்னாத்தா
பதராதே என்மகளே
பட்டியலும் போடாதே
இதுஇதுக்கு இப்படித்தான்அழுகுமுன்னு
இலக்கணங்கள் சொன்னவளே
ஆசையாகபெத்தாலும் ஆஸ்த்தியாகபெத்தாலும்
மல மலன்னு பெத்தாலும்
மலைப்பேதும் இல்லாம
மனதாரப் பார்பவளே
ஊருக்கு தட்டுவைத்து
உள்வீட்டில் அழைத்துவந்து
சங்கிலிகாப்போடு தண்டையுமிட்டுச்
பிஞ்சுவிரலில் மோதிரமும்போட்டு
முத்தமிட்டு மகள் கையில்
கொடுத்து மகிழிகின்ற
குணம்படைத்த ஆயாளே
அம்மான் பிள்ளைகளோ
அழுதுகொண்டே கீழிருக்க
என்னை மட்டும் மடிமீது
எப்பொழுதும் வைச்சவளே
பொன்னே மணியே
புதுவைர ரத்தினமே
காணகிடைக்காத
கனகமனி பூச்சரமே
என்றுதினம் தாலாட்டி
என்னையே துங்கவைப்ப
என்னலமே பெரிதென்று
தன்னலத்தை கருதமாட்ட
கோடைக்கால விடுமுறைய
என்னாளும் மறந்தததில்ல
ஆயாவீடு செல்லாம
விடுமுறையும் கழிந்ததில்ல
பரமபதம் பல்லாங்குழி
பலமுறைதான் ஆடினாலும்
பேரன்பேத்தி புன்முகத்தை
பாத்துபாத்து தோத்துபோவ
கந்தரப்பம் பணியாரம்
நெய்முருக்கு அதிரசம்
வகைவகையா பலகாரம்
வேளைக்கொன்னு தந்திடுவ
அய்யாவின் அருமைபெருமைகளை
மறக்காம சொல்லிடுவ
ஆன்மீக அறநெறிகளை
கதை கதையா சொல்லிடுவ
விடுமுறைய விட்டுட்டு
வீடுவரத் மறுத்திடுவோம்
ஏக்கத்த உள்ள வைச்சு
ஆத்தா வீட்டுக்கு அனுப்பிவைப்ப
உடன் அனுப்பும் மனகோலம்
முனைமுறியா முறுக்கு
தேங்குழல் சீடைவகை
என்றைக்கும் நாவினிக்கும்
சித்தாடைகட்டும் சிறுவயது முதற்கொண்டே
பூப்படைவதற்கும் மணவரைக்கும்
சீர்கொடுக்கும் ஆயாளை
செட்டிநாட்டின் சிகரத்தில் வைத்திடுவோம்
மொறை எதுவும் வாங்காம
சடங்கு எதுவும் செய்யாம
முழுநேர ஆயாவாய்
முத்தலைமுறைக்கு உழைப்பவளே
அனுபவமே படிப்பாக
மகப்பேறு மருத்துவராய்
குழந்தை மருத்துவராய்
பேரப்பிள்ளை வளர்ப்பவராய்
வகைவகையாய் சமைப்பவராய்
ஓய்வின்றி உழைப்பவராய்
மொத்ததில் நீ
Speed 1 Tera Hertz
Memory 1Gita Byte's
எந்திரனுக்கும் மேலாவாய்
வள்ளலாய் ஆயாவை
வாழ்விலே பார்கிறேன் .
--(யாரோ ஒருவர்)
தகவல் :- "Via Whatsapp"

Tuesday, April 11, 2017

நகரத்தார் திருமணம்....

நகரத்தார் திருமணம்....



செட்டிநாட்டுத் திருமணங்களில் சில சிறப்புகள் உண்டு. சீர்வரிசை சாமான்கள், செட்டிநாட்டு சமையல் போன்றவை ஸ்பெஷல் . இதில் மாப்பிள்ளை சாமான், பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டில் பரப்பும் சாமான், மாமியார் சாமான், பெண்ணுக்குத் தாய்வீட்டில் செய்யும் சீர்வரிசை சாமான் என நிறைய உண்டு. அதேபோல்  காலை, மதியம், மாலை, இரவு என வகைவகையான வண்ணமயமான ருசியான உணவுகள் உண்டு. பொதுவாக பெண்ணுக்குத் தாய் வீடு கொடுக்கும் சீர் வரிசையில் ( வசதிக்கேற்றபடி ) குண்டூசியில் இருந்து கப்பல் வரை வைப்பார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. 


திருமணத்தை இந்த நாட்களில்தான் பதிவு செய்கின்றோம். ஆதி காலம்தொட்டே திருமணத்தைப் பதிவு செய்து இசை குடிமானம் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள் நகரத்தார்.


நகரத்தார் திருமணம் முதலில் பெண் பார்த்தலில் ஆரம்பிக்கிறது. பெண் பார்த்துப் பேசி முறைச்சிட்டை எழுதிக் கொள்வதை ”கெட்டி பண்ணிக் கொள்ளுதல்” என்பார்கள். ஐயரிடம் திருமணத்துக்கான நாள் தேதி குறித்து சம்மந்தப்புரம் இருவரும் பேசி முடித்துக் கொள்வார்கள்.


அந்தக் காலங்களில் ஒரு வாரம் கொண்டாடப்பட்ட திருமணம் இன்று ஒரு நாளில் முடிந்து விடுகிறது. முகூர்த்தக் கால் ஊன்றியவுடன்  நடுவீட்டில் கோலமிட்டு  வெள்ளிச் சட்டியில்தேங்காய் பழம் வைத்து  அப்பத்தா, ஐயா, ஆயா, ஐயா, அத்தைகள் ஆகியோருக்கும்  மற்ற நெருங்கிய உறவினருக்கும் கல்யாணம்  சொல்லுவார்கள். வெளியூரில் இருப்பவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும்.


அவரவர் கோயிலில் ( நகரத்தாருக்குள் 9 கோயில்கள் உண்டு ). பாக்கு வைத்து  திருமணத்தைப் பதியக் கோருவார்கள். திருமணமானவுடன் அவர்கள் அந்தக் கோயிலின் புள்ளிகள் ஆகிவிடுவார்கள். திருமணத்துக்கு பிரசாதமும்  மாலையும் அனுப்பி வைக்கப்படும். அதை அணிவித்தபின் தான் திருப்பூட்டுவார்கள்.


திருமணத்துக்கு முதல்நாள் பெண் வீட்டாரிடம் இருந்து மனகோலம், முறுக்குவடை, அதிரசம், டயர் முறுக்கு, மாவுருண்டை, தேன்குழல் போன்ற பலகாரங்கள் வரும். அதை உறவினர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்வார்கள். உறவினர் அனைவரும் கூடி ஆக்கி உண்பார்கள்.  4 வேளையும் பலகாரம், சாப்பாடு அமர்க்களமாக இருக்கும். மாலைப் பலகாரத்தை இடவேளைப் பலகாரம் என்பார்கள்.


முதல் நாள் மாப்பிள்ளைக்குத் தாய்மாமன் மிஞ்சி  ( கால் மோதிரம் ) அணிவிப்பார். அதன் பின் திருமணம் முடிந்தபின் தான் மாப்பிள்ளை வெளியே செல்ல முடியும்.    நாதஸ்வர மேளக்காரர்கள் வந்ததும் மாலையில் சிறிது நேரம் கொழுமி மேளம் இசைப்பார்கள்.  வண்ணார் வந்து மணவறையின் பக்கம் நீலமாத்துக் கட்டுவார்.  கல்யாணக் கொட்டகை அலங்கரிக்கப்படும்.


கழுத்துருவுக்குப் பொன் தட்ட பொற்கொல்லர் வருவார். திருமணம் செய்ய நகரத்தார் கழுத்துரு என்ற திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் கோர்த்துக் கட்டுவார்கள். மொத்தம் 36 உருப்படி இருக்கும். இதைப் பெண் வீட்டில் வாங்கப் போவார்கள். 


கழுத்துருவைக் கொடுக்க மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும் ஆண்களுடன் சில பெண்கள் சென்று  மாப்பிள்ளைக்குத் திருமணத்துக்கு வழங்கும் பொருட்களைப் பரப்புவார்கள். இதில் கைக்குட்டையில் இருந்து உள்ளாடைகள், சட்டை, பாண்டுகளும், செண்ட், சோப், காஸ்மெடிக்ஸ்,  ரேடியோ, டிவி, டேபிள் சேர், கெடிகாரம், குடை, செருப்பு, சூட்கேசுகள்,  இவை பலஜோடிகள் வைப்பார்கள்.

அதே போல் மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்கு ( வசதிக்கேற்றபடி ) 11 பட்டுச் சேலைகள், மற்ற புடவைகள் 16, ரவிக்கைகள், சூடிதார்கள், நைட்டிகள், உள்ளாடைகள், கைக்குட்டைகள், ஹேர்பாண்டுகள், சில்வர் தண்ணீர் ட்ரம், கப்புகள், செருப்புகள், கைப்பைகள், விதம் விதமான பொட்டுகள், க்ளிப்புகள், சூட்கேசுகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, மேக்கப் பொருட்கள், ப்ரஷ், பேஸ்ட்,  பாடி ஸ்பிரே, செண்டுகள் இவை தவிர வெள்ளியில் ஒரு பாத்திரம், ( வேவுக்கடகம், குடம், மிட்டாய்த் தட்டு, மாவிளக்குச் சட்டி போன்றவற்றில் ஒன்று -- சுமாராய் 1/2 கிலோவிலிருந்து இருக்கும் ) தங்க நகை செட் ஒன்று - இதில் காதணிகள், நெக்லெஸ், தோடு இருக்கும். மிகுந்த வசதி படைத்தோர் வைர செட் ஒன்று வைப்பார்கள். இன்னும் பவளம், முத்து, நவரத்தினம் என்று செட்டு செட்டாக நகை வைப்பார்கள்.


இதே போல பெண் வீட்டில் மாமியாருக்கு சாமான் வைப்பார்கள். அதில் பொங்கல் தவலை , அடுப்பு ( இப்போது காஸ் அடுப்பு ) , கோலக்கூட்டு, சம்புடங்கள் என்று இருக்கும்.


இதில் பெண்ணுக்குத் தாய்வீட்டில் தரும் சீதனங்கள்தான் மிக அதிக அளவில் இருக்கும் . வகை வகையாய் சாமான்கள் வைப்பார்கள். வைர நகைகள் , தங்க நகைகள், ரொக்கம் எல்லாம் பேசி முடிவு செய்தபடி கொடுப்பார்கள் .


இதில் ஸ்ரீதனப் பணம் என்று பெண்ணுக்கு  ஒரு பங்கும், மாமியாருக்கு என்று ஒரு பங்கும் இந்த வரதட்சணையில் இடம் பெறும். பெண்ணுக்கான பணத்தைப் பெண், மாப்பிள்ளை பெயரிலேயே டெப்பாசிட் செய்து விடுவார்கள்.


வைர நகைகளில் தோடு , மூக்குத்தி, பூச்சரம்/கண்டசரம்/ மங்கலச் சரம் என்று சொல்லப்படக்கூடிய நெக்லெஸ் ஒன்று, வைரக் காப்புகள், வைர ப்ரேஸ்லெட்டுகள், வைர மோதிரங்கள் போடுவார்கள். தங்கத்தில் வீட்டுக்குப் போடும் செட் ஒன்றும் வெளியே போக விஷேஷங்களில் போட என்று பெரிய செட் ஒன்றும் போடுவார்கள்.
இது போக வெள்ளிச் சாமான்கள், எவர் சில்வர் சாமான்கள், வெண்கலச் சாமான்கள் ( பித்தளை), சிலோன், பர்மா, மைடான் மங்குச் சாமான்கள் ,  ஜெருமன் சாமான்கள் ( அலுமினியம் ), செம்புச் சாமான்கள், அலமாரி, பீரோ , கட்டில் போன்ற மரச்சாமான்கள்,  இரும்புச் சாமான்கள், தகரங்கள், பீங்கான் ஜாடிகள், குழுதாடிகள், கண்ணாடிச் சாமான்கள், ப்ளாஸ்டிக் ரப்பர் சாமான்கள், பின்னிய துண்டுகள், பைகள், தலையணைகள், மெத்தைகள், பர்மா பாய்கள், அன்னக் கூடைகள், மாக்கல், மர விளையாட்டுச் சாமான்கள் , மரவைகள், திருகை, அம்மி, ஆட்டுக்கல் போன்ற கல்சாமான்கள் பரப்புவார்கள்.


இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றாற்போல டிவி, பிரிட்ஜ், வாஷிங்க் மெஷின், டிவிடி ப்ளேயர், சோஃபா செட்டுகள், ( சிலருக்கு வீடு, மனை போன்றவையும் கொடுக்கிறார்கள் . ). க்ரைண்டர் , மிக்ஸி, கட்டில், மைக்ரோவேவ் ஓவன், டைனிங் டேபிள் , ட்ரெஸ்ஸிங் டேபிள், டப்பர்வேர் பொருட்கள், நான்ஸ்டிக் பொருட்கள் ஆகியவை கொடுக்கிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் தனித்தனியாகப் பேர் உண்டு.அதே போல் ஒவ்வொரு பாத்திரத்திலும் பெண்ணின் தகப்பனாரின் பெயரின் முதல் எழுத்தையும் பெண்ணின் பெயரில் முதல் எழுத்தையும் பெயர் வெட்டிக் கொடுப்பார்கள்.


முதல் நாள் இரவு பங்காளி வீட்டுப் பெண்கள் நடுவீட்டுக் கோலம்,  நிலைவாசல் கோலம் மணவறைக் கோலம் இடுவார்கள். ஆண்கள் அரசாணைக்கால் ஊன்றி கிலுவைக் கம்பும் பாலைக் குச்சியும் கட்டி அதன் முன்  மணை போடுவார்கள்.  கழுத்துருவைக் கோர்ப்பார்கள்.


மறுநாள் காலை ஐயரைக் கூப்பிட்டு பெண்ணைக் காவல் காக்கும் பூரம் என்னும் தெய்வத்திடம் பெண்ணைக் காக்க மணமகன் வருவதாக் கூறிக் கழிப்பார்கள். அதன் பின் தாய்மாமன்  காப்புக் கட்டுவார். மூத்த பிள்ளை திருமணமாக இருந்தால் மாம வேவு என்று ஆயா வீட்டுச் சீர் செய்வார்கள்.


பக்கத்துக் கோயிலில் இருந்து மாப்பிள்ளைக்கு தங்க கைக்கெடிகாரம், கைச்சங்கிலி, கழுத்துச் சங்கிலி, மோதிரம் ( இவை வசதி பொறுத்து வைரத்திலும் இருக்கும் ) அணிவித்து மாலை பூச்செண்டு கொடுத்து மாப்பிள்ளை அழைப்பார்கள். ஸ்லேட்டு  விளக்கு வைத்து அழகு ஆலத்தி எடுத்து வீட்டு வாசலில் பெண் எடுக்கிக் காண்பிப்பார்கள். ( அந்தக் காலத்தில் பெண் அவ்வளவு சின்னக் குழந்தையாக இருந்ததால்  இடுப்பில் எடுக்கிக் காண்பிப்பார்களாம். )


மணவறையில் மாப்பிள்ளையின் உறவினர்கள் பகவணம் செய்ய ( பாலில் போட்ட பூவால் அர்ச்சித்தல்)   மாப்பிள்ளையின் தாய் மாமன் மாப்பிள்ளைக்குக்  காப்புக் கட்டுவார்.  ( இரண்டு நாட்களுக்கு முன்பே ஊறவைத்த  நவதானியங்கள்  முளைவிட்டிருக்கும். இதை முளைப்பாரி என்பார்கள். இதை ) அரசாணிக்காலில் முளைப்பாரியை எடுத்துப் போடுவார்கள்.


பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்த சீதனப் பட்டைக் கட்டித் திருப்பூட்டுவார்கள். இதில் மணவறையில் பெண் மணவறைப் பலகையில் கிழக்குப் பார்த்து நிற்க மணமகன் கீழே நின்று திருப்பூட்டுவார். முதலில் பெண்ணுக்கு அவரவர்  நகரக் கோயிலிலிருந்து வந்த விபூதி, குங்குமத்தை வைத்து  கோயில் மாலையைப் போட்டு பின் கழுத்துருவைக் கட்டுவார். இதில் இரு முடிச்சுக்கள் அவர் போட மூன்றாம் முடிச்சை நாத்தனார் அல்லது மாமியார் போடுவார்கள்.


பின் மணவறைச் சடங்கை மாமியார் , நாத்தனார் செய்து கொள்வார்கள். இதில் சடங்குத்தட்டு, நிறைநாழி, கத்திரிக்காய், சிலேட்டு விளக்கு,  குழவி ( குலம் வாழும் பிள்ளை ) போன்றவை வைத்து சடங்கு செய்வார்கள். பின் கல்யாண வேவு எடுப்பார்கள்.  இது வேவுக்கடகாம் என்ற பாத்திரத்தில் நெல் அரிசி வைத்து எடுக்கப்படும். பொதுவாக திருமணத்தில் உபயோகிக்கப்படும் இந்தப் பொருட்கள் எல்லாமே வெள்ளியில் இருக்கும்.


இதன் பின் பங்காளிகள் பால் சட்டி வைத்து பணத்திருப்பேடு ( வருகைப் பதிவு ) எழுதுவார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால் மாப்பிள்ளை பெண்ணின் அப்பத்தா வீட்டு ஐயாக்களோ அல்லது தகப்பனார்களோ இந்தத் திருமணத்தைப் பதிவு செய்து இசைகுடிமானம் என்ற பத்திரத்தில் கையெழுத்திட்டுப் பதிவு செய்து ஒருவருக்கொருவர் மாற்றி வைத்துக் கொள்வார்கள்.


மாப்பிள்ளையும் பெண்ணும் மாமக்காரருடன் மணவறையைச் சுற்றி வந்து கோட்டையைக் கடந்து ( நெல் வைத்து வைக்கோல் பிரியால் சுற்றிய பை ) சாமிவீட்டுக்குள் சென்று சாமியை வணங்கி வருவார்கள். மாப்பிள்ளையுடன் மாப்பிள்ளைத் தோழர் ஒருவர் வள்ளுவப்பை என்ற ஒன்றை வைத்திருப்பார்.
திரைசீலையில் முடிதல், மாப்பிள்ளைக்கு சாப்பாடு போடுதல், ஐயர் செய்யும் மணவறைச் சடங்குகள், மஞ்சள் நீராடுதல், காப்புக் கழட்டிக் கால்மோதிரம் இடுதல் ஆகியன நடைபெறும்.


திருப்பூட்டியவுடன் அனைவரையும் வணங்கி வருவார்கள் மணமக்கள். இதன் பின்  கும்பிட்டுக் கட்டிக் கொள்ளுதல் என்று அனைவரிடமும் கும்பிட்டு விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள்.  அதன் பின் குலம் வாழும்பிள்ளையைக் கொடுத்துவாங்கிக் கொள்வார் மணப் பெண். பின் சொல்லிக் கொள்ளுதல். அதன் பின் பெண்ணழைத்து விடுதல் நடைபெறும்.
மாப்பிள்ளை வீடு வெளியூரில் இருந்தால் கட்டுச் சோறு கட்டி அதை ஒரு ஊரணிக்கரை அல்லது குளக்கரையில் உண்பார்கள். மாப்பிள்ளை வீட்டில்  மாலையில் பெண்ணழைத்துக் கொள்வார்கள் . அங்கேயும் குடத்தில் குலம் வாழும் பிள்ளையை எடுத்து மாப்பிள்ளை பெண்ணின் கையில் கொடுக்கவேண்டும். அதன் பின் பெண்ணழைத்த சடங்கு செய்வார்கள். அதன்பின் பெண் வீட்டுக்காரர்கள் சொல்லிக் கொள்வார்கள்.


மறுநாள் படைப்பு, குச்சி தும்பு துவாலை கட்டல், முதல் வழி, மறு வழி, பால்பழம் சாப்பிடுதல் , குலதெய்வம் கும்பிடுதல் என அனைத்தும் நடைபெறும்.


செட்டி நாட்டுத் திருமணங்கள் பொதுவாக வீடுகளிலேயே நடைபெறும். சமுக்காளம் , பந்திப்பாய், சடப்பிரம்பாய், காசாணி அண்டாக்கள் , மற்ற புழங்கும் பித்தளை, சில்வர் சாமான்கள் அனைத்தும் வீடுகளிலேயே இருக்கும். முகப்பு, பட்டாலை, பத்தி, பட்டாலை, வளவு, ஆல்வீடு, இரண்டாம்கட்டு அடுப்படி, மூன்றாம்கட்டு என வீடுகள் இருப்பதால் எவ்வளவு கூட்டம் வந்தாலும் தாங்கும்.


சீர் சாமான்களில் குண்டூசியில் இருந்து கப்பல் வரை வைப்பார்கள். மேலும் சாப்பாடு என்றால் அது செட்டிநாட்டுச் சாப்பாடுதான் சிறந்தது. வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், ஆப்பம், பால் பணியாரம், மசாலைச் சீயம், இனிப்புச் சீயம், கவுனி அரிசி, பாதாம் அல்வா, தம்புருட் அல்வா, ஃப்ரூட் புட்டிங், வறுத்த முந்திரி, முந்திரி பக்கோடா, வெங்காயக் கோஸ், அவியல், சாம்பார்,  டாங்கர் சட்னி, மண்டி, தென்னம்பாளைப் பொடிமாஸ், இளநீர்/ ரோஜாப்பூ ரசம், சுண்டைக்காய்/ பேபிகார்ன்/ காலிஃப்ளவர் சூப், கருவேப்பிலை சாதம், கொத்துமல்லி சாதம், புலவு, காளான் மசாலா, இங்கிலீஷ் காய்கறி பிரட்டல், துவட்டல், கூட்டு, பாலாடைக்கட்டி குருமா, கொத்துப் புரோட்டா, மசாலா நூடுல்ஸ், தக்காளிக்குழம்பு, காய்கறி ( கருவாட்டுக் ) குழம்பு, மிளகுக் குழம்பு, கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு, மாம்பழ சாம்பார்,  குறுவை அரிசிப் பாயாசம், பாதமாம்கீர், பழப்பாயாசம், அக்கார வடிசல் ஆகிய ஸ்பெஷல் ஐட்டங்கள் இடம் பெறும்.


திருமணத்தை ஆதி காலம் தொட்டே பதிவு செய்தவர்கள் மட்டுமல்ல. திருமணச் சடங்குகளில் எல்லா சாதியினரின் ( ஐயர், நாவிதர், வண்ணார், பண்டாரம், குலதெய்வக் கோயில் வேளார், )ஒத்துழைப்பையும் பெற்று சிறப்புறச் செய்தவர்களும் இவர்களே.

 இந்தக் கட்டுரை ஜூன் 1, 2013 நம் தோழியில் வெளிவந்தது.  

நகரத்தார் திருமண நடைமுறைகள்...

நகரத்தார் திருமண நடைமுறைகள்...


 திருமணத்திற்கு முதல் நாள்

கூடி ஆக்கி உண்ணுதல்:
திருமணத்திற்கு முதல்நாள் உறவினர்கள் எல்லோரும் கூடி ஆக்கி உண்ணும் நிகழ்ச்சி. நம்மில் பெரும்பாலோர் 'படைப்பு' என்று நம் முன்னோரை வழிபடுகின்ற நாளாக இதனை அமைத்துள்ளனர். அன்றைய தினம் அவரவர் பழக்கப்படி குல தெய்வங்களுக்கு பணம் முடிப்பார்கள்.

திருவிளக்கு ஏற்றுதல்:
அப்பத்தாள் அல்லது அத்தையை அழைத்து நடுவீட்டில் விளக்கு ஏற்றுவது திருவிளக்கு ஏற்றுதல் என்று அழைக்கப்படுகிறது.

கொளுமேளம்:
மேளக்காரர்கள் வந்ததும் சங்கு ஊதி நல்ல காரியத்தை கொளு மேளத்தை வாசிக்கச் செய்யவேண்டும்.

மணை போடுதல்:
பெண் வீட்டில் சுமங்கலிப் பெண்கள் ஊருணியிலிருந்து மணைக்கு மண் அவரவர்கள் ஊர் வழக்கப்படி எடுத்து வருவார்கள். எடுத்து வந்த மண்ணை குழைத்து ஐந்து செங்கற்களின் மேல் வைத்து சங்கு ஊதி அதன் மேல் மணையை எடுத்து வைக்கவேண்டும்.வெளியூர் திருமணமாக இருந்தால் பெண் வீட்டில் மட்டுமே இச்சடங்கு நகழும். உள்ளூராக இருந்தால் இருவீட்டிலும் நடக்கும். பங்காளி மற்றும் உறவினர் வீட்டுப் பெண்கள் வளவுக்குள் திருமண வீட்டிற்கு எதிரே மணை போடுவார்கள். பெண் வீட்டில் இரட்டை மணையும், மாப்பிள்ளை வீட்டில் ஒற்றை மணையும் வைப்பது மரபு.

மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தல்:
திருமணத்திற்கு இரண்டொரு தினங்களுக்கு முன் மணமகன் கால்களில் இரண்டாவது விரல்களில் வெள்ளியினாலான மோதிரம் ஆசாரியை வரச் சொல்லி அணிவிப்பார்கள்.

தும்பு பிடித்தல்:
முதல் நாள் இரவு படைப்பு முடிந்ததும் இருவீட்டாரும் திருமணம் நிகழ்கின்ற நடு (அறையில்) வீட்டில் அன்று காலை குத்துவிளக்கு ஏற்றி வைத்து அந்த அறையின் வெளிச் சுவற்றிலும், உள்வீட்டுச் சுவற்றிலும், கதவிலும் மங்கலத்தைக் குறிக்கும்படி கோலக் கூட்டினால் ஏட்டுக்கயிறு கொண்டு (படத்தில் காட்டியது போன்ற) வடிவத்தில் வரைவார்கள். இதை கணவன் மனைவியோ அல்லது இரண்டு மங்கலப் பெண்டிரோ செய்வது வழக்கம். இதன் வடிவத்தைப் பார்க்கும்போது இறைவனை அந்த நடுவீட்டைக் கோவிலாக எண்ணி எழுந்தருளச் செய்வது போலத் தோன்றும்.

மாற்றுக்கட்டுதல்:
திருமண மேடைக்கு மேலே நீல நிறம் அல்லது பிற நிறங்களில் (கருப்பு நிறம் தவிர) மாத்துச் சேலை இரண்டை சலவைத் தொழிலாளி (தற்பொழுது பங்காளிகள்) திருமணத்திற்கு முதல் நாள் கட்டிவிடுவார்கள். அக்காலத்தில் பல்லி முதலான பூச்சிகளோ, தூசியோ மணமக்கள் மீது விழுந்துவிடாமல் பாதுகாப்பதற்காகவே இப்படி மாற்றுக் கட்டியிருக்கிறார்கள்.


அரசாணிக்கால் கட்டுதல்:
முன்காலத்தில் மன்னர்கள் நேரில் வந்து அவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாகவும் ஒரே நேரத்தில் பல திருமணங்கள் நடைபெறும் அளவு மக்கள் தொகை பெருகியதும் அரசன் நேரில் வர இயலாத நிலையில் அரசன் ஆணையை முன்னிறுத்தித் திருமணங்கள் நடைபெற்றிருக்கலாம். அதுவே பின்னர் அரசாணிக்காலாக மாறியிருக்கலாம்.பெண் வீட்டில் மணைக்கு எதிரில் கோலமிட்ட இடத்தில் பங்காளிகளைக் கொண்டு அரசாணி மேடையை வைத்து அதிலுள்ள பள்ளத்தில் பாலை ஊற்றி பவளத்தைப் போட வேண்டும். அதன் மேல் மூங்கில் கம்பை ஊன்றி அதனைச் சுற்றிலும் கம்பு தெரியாதவாறு கிளுவை, பாலை இரண்டு குச்சிகளையும் இணைத்து அரச இலை, மாவிலை முதலியவற்றால் சுற்றி கீழிருந்து மேலாக கயிறு கொண்டு கட்டவேண்டும்.இதன் அருகில் உயரம் குறைந்த ஸ்டூலில் சரவிளக்கு வைத்து நல்லெண்ணை தீபமிடவேண்டும். விளக்கை திருமணத்தன்று காலையில் ஏற்றி நிகழ்ச்சிகள் முடியும் வரை எரியவிடவேண்டும்.

முதல்சீர் வைத்தல்:
கல்யாணத்திற்கு முதல்நாள் காலையில் பெண் வீட்டிலிருந்து பெண்கள் மட்டும் மாப்பிள்ளை வீட்டிற்கு, இருவீட்டாரும் பேசிக் கொண்டபடி குடம், செம்பு, விளக்கு ஆகியவற்றுடன் மஞ்சள், உப்பு, புளி, பஞ்சு, விபூதி, பச்சரிசி, பாக்கு ஆகிய சாமான்களுடன் செல்லவேண்டும். இந்நகழ்ச்சி உள்ளூராக இருந்தால் மட்டும் நடைபெறும்.


மறுசீர் வைத்தல்:
திருமணத்திற்கு முதல்நாள் மாலையில் பெண் வீட்டிலிருந்து மறுசீர் வைக்க ஆண்களும், பெண்களும் போகவேண்டும். ஆண்கள் தேங்காய் சட்டி, சரிகை வேஷ்டி, துண்டு, சங்கிலி, மோதிரம், கைக்கெடிகாரம், எலுமிச்சம்பழம், பூச்செண்டு, சீர்வைத்த சாமான் நோட்டு, மாமியார் சாமான், பணம் ஆகியவற்றைக் கொண்டு போகவேண்டும். இந்நிகழ்ச்சி இப்பொழுது கல்யாணத்தன்று காலையில் நடைபெறுகிறது

கழுத்துரு வாங்கச் செல்லுதல்:
வள்ளுவப் பையில் வெற்றிலை பாக்கு, விரலி மஞ்சள், எழுத்தாணி, குலம் வாழும் பிள்ளை, சிவப்புத் துண்டு ஆகியவற்றை வைத்து பங்காளிகள் இருவர் திருமணத்திற்கு முதல் நாள் பெண் வீட்டிற்குச் சென்று கழுத்துஉரு உருப்படிகள் 31-ம் (சில ஊர்களில் 29-ம்), குச்சி, தும்பு, துவாளை உருப்படி ஆக 3ம், பிள்ளைத் தும்பு-1ம் தாலிச் சங்கிலியையும் சிகப்புத் துண்டில் முடிந்து வள்ளுவப் பையில் வைத்து வாங்கிவர வேண்டும்.

திருமணத்தன்று பெண் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

பூரம் கழித்தல்:
மணமகளின் கன்னித் தன்மையை நீக்கி அவளை இல்லறத்திற்கு உரியவளாக மந்திரப் பூர்வமாக ஆக்குதலே இதன் நோக்கம். திருமணத்தன்று அதிகாலையில் மணமகளை நீராடச் செய்து, ஒரு சரமாலை மட்டும் கழுத்தில் அணிவித்து மணமேடைக்குப் பக்கத்தில் தடுக்கில் நிற்கச் செய்து மணமகளின் அம்மான் மனைவி அல்லது அத்தையோ அல்லது தாயோ பூரம் கழிப்பார்கள்.மணமகளின் உடலில் ஏழு இடங்களில் அதாவது தலையிலும், தோள்பட்டைகள் இரண்டிலும், இடுப்பில் இரண்டு பக்கங்களிலும், இரண்டு பாதங்களிலும் வேப்பிலையை வைத்து இரும்பு சத்தகத்தினால் அல்லது மரக் குச்சியினால் தட்டி விடுவார்கள். சில வட்டகைகளில் புரோகிதர் விநாயகர் பூஜை, வருண கும்ப பூஜை செய்து பூரம் கழிப்பார்கள். இதன் பிறகு மீண்டும் மணமகள் ஒரு முறை நீராடவேண்டும்.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து புறப்படுதல்:
மணமகன் தன் வீட்டிலிருந்து புறப்படும்போது, மணமகனுக்கு அப்பத்தாள் மணமகனை நடுப்பத்தியில் கோலத்திற்கு முன் நிறுத்தி அழகு ஆலத்தி எடுப்பார்கள். அழகு ஆலத்தியில் மூன்று ஆலத்திகள் இருக்கும். சதுர வடிவில் 4 திரிகளும், கூம்பு போன்ற இரு ஆலத்திகளிலும் ஒவ்வொரு திரியும் இருக்கும். மணமகனுக்கு முன்பு ஸ்லேட் விளக்கு  , அரிக்கேன் விளக்கு வைத்து ஆலத்தி எடுத்து விபூதி பூசி வழியனுப்பி வைப்பார்கள். அப்பத்தாள் இல்லையென்றால் மணமகனுக்கு அத்தை அல்லது வீட்டிற்குப் பெரிய பெண்டிர்கள் செய்வார்கள்.உள்ளூர் திருமணமாக இருந்தால் மாப்பிள்ளை திருமணத்தன்று காலையில் பங்காளிகள் உறவினர்களுடன் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து சாமி கும்பிடுதல் மரபு. வெளியூர்த் திருமணமாக இருந்தால் மாப்பிள்ளை அழைப்பு நிகழும் கோவிலிலேயே இந்த அர்ச்சனை வழிபாடுகள் நிகழும்.மாப்பிள்ளையின் தகப்பனார் அல்லது வீட்டிற்கு பெரியவர்கள் தேங்காய் சட்டியுடனும், திருப்பூட்டுத் தாம்பளத்துடனும், தாயார் சடங்குத் தட்டுடனும், சகோதரி பால் பானையுடனும், சங்கு ஊதி, வள்ளுவப்பையுடன் மாப்பிள்ளையை அழைத்துச் சென்று மாமக்காரர், தாயார், சகோதரியுடன் புறப்பட்டுச் செல்லவேண்டும்.

கழுத்து உருவிற்குப் பொன் கொடுத்தல்:
கழுத்துரு என்பது மணமகள் வீட்டார் செய்யவேண்டிய அணிகலன்களில் ஒன்று. ஆயினும் மணமகன் வீட்டாருடைய தாலிதான் அணிவிக்கப்பட வேண்டும் என்ற பழக்கத்தின் காரணமாக அவர்களுடைய பொன்னும் இந்த பெரிய தாலியில் சேர்ந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு குறிப்பிட்ட நல்ல நாளில் மணமகன் வீட்டார் பங்காளிகளையும், சொந்தக்காரர்களையும் அழைத்துக் கொண்டு, பொன், சந்தனம், குங்குமம், பூ, வெத்திலை, பாக்கு, தேங்காய் முதலியவைகளைக் கொண்டு வருவார்கள். மணமகள் வீட்டில் அவர்களுடைய பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பொற்கொல்லர் ஒருவர் வந்து அவர்கள் தருகின்ற பொன்னை வாங்கித் தட்டிக் கொடுப்பார். இந்த கழுத்து உரு செய்வதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் முன்கூட்டியே தங்கம் சேர்ப்பதற்கு இடம் வைத்து செய்து விடுவதால் திருமணத்தன்று காலை இந்நகழ்ச்சியை நடத்தி மணமகன் வீட்டார் தரும் தங்கத்தை கழுத்திருவில் சேர்த்து விடுகிறார்கள்.

மாப்பிள்ளை அழைப்பு:
திருமணத்தன்று காலையில் மாப்பிள்ளை வீட்டார்கள், ஊர்ப் பொது இடத்தில் (கோவிலில்) வந்து இருப்பார்கள். மணமகள் வீட்டார் ஒரு பெரிய தட்டில் மணமகனுக்கு ஜரிகை வேஷ்டி, துண்டு, மாலை, சங்கிலி, கெடிகாரம், மோதிரம் முதலியவைகளை எடுத்துக் கொண்டு மணமகன் தங்கியிருக்கும் இடத்திற்கு மேளவாத்தியம், சங்கு முதலியன ஒலிக்க மணமகள் வீட்டு உறவினர்கள் ஊர்வலமாக வந்து அவற்றை அணிவித்து அழைத்துச் செல்வார்கள். மணமகனின் தந்தை ஒரு சட்டியில் பாக்கு, மஞ்சள் இரு தேங்காய்களை வைத்து எடுத்துக் கொண்டு வருவார்.

பெண்ணெடுக்கிக் காட்டுதல்:
மாப்பிள்ளை, பெண்வீட்டிற்குள் நுழையும்போது பெண்ணைப் பெண்ணின் அத்தை அழைத்துவந்து மாப்பிள்ளைக்குக் காட்டுதல் இச்சடங்கு ஆகும்.

விளக்கு வைப்பது:
மாப்பிள்ளையை அழைத்து பெண் வீட்டிற்குள் கூட்டி வரும்போது நடுப்பத்திக் கோலத்தின் முன் நிற்க வைத்து பெண்ணின் அப்பத்தாள் அல்லது அத்தை வந்து ஆரத்தி எடுத்து விபூதி பூசி, மாப்பிள்ளையை நடுவாசலில் கிழக்கு முகமாக உட்கார வைப்பார்கள்.

பகவத்யானமும் காப்புத் கட்டுதலும்:
திருமண வாழ்வு சிறக்க இறைவனை எண்ணி வழிபடுதலே பகவத்யானம். மணமகனுக்கு முதலிலும் மணமகளுக்குப் பிறகும் தனித்தனியே புரோகிதர் ஒருவர் சங்கல்பம் செய்துவைத்து கணபதி பூஜை செய்வார். பிறகு தாய் மாமன், மணிக்கட்டில் ஒரு சிறு வெள்ளி நாணயத்தை (தற்போது 50 காசு) சிகப்புத் துணியில் முடிந்து நுனி உடையாத விரலி மஞ்சளையும் சேர்த்துக் கட்டிவிடச் செய்வார்.திருப்பூட்டுதலுக்கு ஆசீர்வாதம் வாங்குதல்:இருவருக்கும் காப்புக்கட்டி முடிந்ததும் மணமகன் வீட்டிலிருந்து கொண்டுவந்த தாம்பளத்தில் உள்ள திருமாங்கல்யத்திற்கு (கழுத்துரு) இலட்சுமி பூஜை செய்து மணமகளுடைய தாய்மாமனும் அவர்தம் மனைவியும் வீட்டுப் பெரியவர்களிடம் காட்டி வாழ்த்துப் பெற்று நடுவீட்டில் கொண்டுபோய் வைத்துவிடுவார்கள். மணமக்கள் இருவருக்கும் பகவத்யானமும், காப்புக்கட்டுதல் நடைபெறும்பொழுது அவரவர்கள் வீட்டுப் பெரியவர்கள், சுற்றத்தார்கள் அவர்களைப் பூமணம் இட்டு வாழ்த்துவார்கள்.

பூமணம் இடுதல்:
பகவணம் செய்யும்போது மலர்களை பசும்பாலில் நனைத்து மணமக்கள் உடலில் மணிக்கட்டு, முழங்கை, தோள்பட்டை ஆகிய மூன்று இடங்களிலும் தொட்டு வாழ்த்துதலே பூமணமாகும். இதை மூன்று முறை செய்யவேண்டும். முதலில் மாமக்காரர்தான் செய்யவேண்டும். அதேபோல் மாமக்காரர்தான் முடித்து வைக்கவேண்டும். மணவறையிலும் பூமணம் இடவேண்டும்.

அரிமணம் இடுதல்:
முளைப்பாலிகை கிண்ணங்கள் ஐந்திலிருந்தும் முளைவிட்ட தானியங்களைக் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப்போட்டு வாழ்த்துதல் அரிமணமாகும். பகவணத்தின் போது மணமக்கள் இருவருக்கும் அரிமண இடுதல் நடைபெறும். பின்னர் மணவறையின் போதும் தம்பதிகளுக்கு எல்லோரும் அரிமணம் இடுவார்கள்.

திருப்பூட்டுதல்:
மணமகளுக்கு, மணமகனின் வீட்டார் கொண்டுவந்த ஆடைகளை அணிவித்து நன்கு அலங்கரித்து மணமேடை மீது கிழக்கு முகமாக நிற்கச் செய்வார்கள். பின்னர் மணமகனை அழைத்து மணமகளுக்கு எதிரே நிற்கச் செய்வர். மணமகளின் கைகள் இரண்டையும் ஏந்தச் செய்து அதில் பச்சரிசி, தேங்காய் முதலியவற்றைக் கொடுப்பார்கள். தேங்காயின் குடுமிப்பகுதி மணமகனை நோக்கி இருக்கவேண்டும். மணமகன் கோவிலில் இருந்து வந்துள்ள திருநீற்றை, தான் பூசிக் கொண்டு, மணமகள் நெற்றியிலும் பூசவேண்டும். பிறகு கோவில் மாலையை மணமகள் கழுத்தில் அணிவிக்க வேண்டும். பின்பு பெரியவர் ஒருவர் துணையுடன் அவர் எடுத்துத் தருகின்ற கழுத்துருவை வாங்கி மேல்பாகத்தில் திருமாங்கல்யம் உள்ள பகுதி வருமாறு பெண்ணுக்கு அணிவித்துக் கழுத்தின் பின்புறம் மூன்று முடிச்சு போடவேண்டும். முதல் இரண்டு முடிச்சுக்களை மாப்பிள்ளையும் மூன்றாவது முடிச்சை நாத்தனாரும் போடுவது மரபு. பிறகு தாலியை அணிவிக்க வேண்டும். அதன் பின்னர் திருமாங்கல்யத்திலும் மூன்று முடிச்சுகளின் மீதும் சிறுதாலியிலும் மஞ்சள் தொட்டு வைத்து குங்குமம் இடவேண்டும்.மணமகள் கையில் உள்ள பச்சரிசி, தேங்காய் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்துவிட்டு, மணமக்கள் இருவரும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்ளவேண்டும். மணமகன்தான் முதலில் மாலையிட வேண்டும். பிறகு தம்பதிகள் ஒருவருக்கொருவர் இனிப்பை பரிமாறிக் கொள்வது இன்றைய வழக்கம்.திருப்பூட்டி முடிந்ததும், மணமக்கள் மாமக்காரருடன் வளவு, முகப்பிலுள்ளவர்களிடம் போய் வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.திருப்பூட்டுதலின் போதும், மாலைமாற்றும் போதும் கெட்டிமேளம் வாசிக்கச் சொல்லவேண்டும். பிறகு அனைவருக்கும் ரொட்டி, மிட்டாய், சர்பத் கொடுக்கவேண்டும்.

திருப்பூட்டும் முறைகள்:
நகரத்தார் திருமணங்களில் திருப்பூட்டுதல் மூன்று விதமாக நிடைபெறுகிறது. மேலவட்டகை எனப்பெறும் வலையபட்டி, மேலைச்சிவல்புரி, குழிபிறை ஆகிய பகுதிகளில் மாப்பிள்ளை மணையில் நிற்க, பெண் கீழே நிற்க திருப்பூட்டப்படுகிறது. கீழ்வட்டகை எனப்பெறும் காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர் ஆகிய பகுதிகளில் பெண் மணைமீது நிற்க, மாப்பிள்ளை கீழே நிற்க திருப்பூட்டப்படுகிறது. தெற்கு வட்டகை எனப் பெறும் நாட்டரசன் கோட்டை, ஒக்கூர், அலவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் அறைக்குள் மாப்பிள்ளையும் பெண்ணும் சரிசமமாக நின்று திருப்பூட்டுதல் நடைபெறுகிறது.

இசைவு பிடிமானம் எழுதுதல்:
இசைவு பிடிமான புத்தகங்கள் அச்சிடப்பட்டு கிடைக்கின்றன. அதில் தனித் தனியே இருதரப்பாரும் அவரவர்கள் கோவில் பிரிவுகள் விவரத்தினைப் பங்காளியைக் கொண்டு எழுதி மணமக்களின் தந்தைமார்கள் இருவரும் நடுவீட்டில் அமர்ந்து கையெழுத்துச் செய்து, மாப்பிள்ளை வீட்டார் எழுதியது பெண் வீட்டிலும் பெண் வீட்டார் எழுதியது மாப்பிள்ளை வீட்டிலும் இருக்கும்படியாக மாற்றிப் பெற்றுக் கொண்டு, வைத்துக் கொள்ள வேண்டியது. இதில் எழுதிய பங்காளிகளும் கையொப்பம் இடவேண்டும் 

திருப்பூட்டுச் சடங்கு:
மணமகனின் தாயார் அல்லது சகோதரி அல்லது இருவரும் செய்கின்ற சடங்கு இது.ஒரு சடங்குத் தட்டில் ஏழு கிண்ணங்கள் இருக்கும். அவற்றில் பிள்ளையார், வெத்திலைபாக்கு ஒன்றிலும், மற்றவை ஒவ்வொன்றிலும் மஞ்சள், விபூதி, பச்சரிசி, உப்பு, புளி, பஞ்சு முதலியனவும் வைத்திருப்பார்கள். ஒரு படியில் நிறைய நெல் வைத்து அதன்மேல் கத்தரிக்காய் ஒன்று வைத்திருப் பார்கள் (இதனை 'நிறை நாழி' என்பர்) ஒரு கெண்டிச் செம்பில் (மூக்கு வைத்த செம்பு) தண்ணீர் வைத்திருப்பார்கள். இவைகளை மணையின் மீது கிழக்கு முகமாக நிற்க வைத்து, கீழே தடுக்கு போட்டு அதில் சடங்கு செய்கிறவர்கள் நின்று கொள்வார்கள். முதலில் சடங்கு தட்டில் உள்ள விபூதியை வலது கரத்தால் எடுத்து சடங்கு செய்கிறவர்கள் தான் பூசிக் கொண்டு, பிறகு பெண்ணுக்கும் பூச வேண்டும். இந்த ஏழுகிண்ணங்கள் ஒவ்வொன்றையும் மூன்று மூன்று முறை தொட்டு விபூதியைத் தானும் கழுத்தில் பூசிக் கொண்டு பெண்ணுக்கும் கழுத்தில் பூசவேண்டும். இவ்வாறு இருபத்தியொரு முறை பூசியதும் வலது கரத்தில் கெண்டிச் செம்பை எடுத்துக் கொண்டு மணமகள் கையில் ஒரு வெற்றிலையைக் கொடுத்து முதலில் நிறை நாழியை சடங்கு செய்பவர் இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையினால் கெண்டிச் செம்புத் தண்ணீரை மணமகள் கையில் உள்ள வெற்றிலையில் ஊற்றுவார். மணமகள் அந்த நீரைப் பாதங்களில் வடித்துவிட்டு இரு கைகளினாலும் வெற்றிலையை நெற்றியில் வைத்து வணங்குவாள். இச்சடங்கு மூன்று முறை நிகழும். இது போலச் சிலேட்டு விளக்கு, பிள்ளைக் குழவி முதலியவற்றை வைத்துக் கொண்டு சடங்கு செய்வர். சடங்குகள் முடிந்ததும் சிலேட்டு விளக்கை நேராக வீட்டுக்குள் வைக்கவேண்டும். மற்ற பொருள்களை மணமகளின் பின்புறமாகச் சுற்றி இடவலமாகக் கொடுத்து வீட்டுக்குள் வைக்கவேண்டும்.

மணவறைச் சடங்கு:
புரோகிதர் இச்சடங்கை நடத்தி வைப்பார். விநாயகர் பூசை, வர்ணகும்ப பூசை, அக்கினி வளர்த்து நவக்கிரக ஓமம், ஆயுள் ஓமம், தீவலம் வருதல், அரிமணம் இடுதல், பூமணம் இடுதல் ஆகியவை நிகழும். இத்தகைய நிகழ்ச்சிகள் எல்லாம் மாமக்காரர்கள் முதலில் செய்த பிறகே மற்றவர்கள் செய்ய வேண்டும். பிறகு மணமகளின் உடன் பிறந்தவரில் ஒருவர் மணமகனுக்கும், மணமகனின் உடன் பிறந்தவர்களில் ஒருவர் மணமகளுக்கும் திரட்டுப்பால் தடவுவார்கள்.வாழ்க்கை வளமுடன் இனிமை பொருந்தியதாக அமையட்டும் என்பதற்கு அறிகுறியாக திரட்டுப்பாலுக்குப் பதிலாக வாழைப்பழத்தை தின்பதற்குக் கொடுக்கின்ற நிகழ்ச்சிதான் இது. காலப்போக்கில் வாழைப்பழத்தை மணமக்களின் வாயில் தடவி, வேடிக்கையாகச் சிரித்து மகிழ்கின்ற நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது.பிறகு மாப்பிள்ளை தலையில் எண்ணெய் சீயக்காய், தண்ணீர் முதலிய வற்றைப் பெண்ணும், பெண்ணின் தலையில் மாப்பிள்ளையும் மாவிலையால் தொட்டு வைப்பார்கள்.அதன் பிறகு மாப்பிள்ளையின் எதிரில், ஒரு முக்காலி வைத்து அதன் மீது ஒரு சட்டியை வைத்து அதில் சோறு, பருப்பு, நெய், வாழைப்பழம் முதலிய வற்றைப் பரிமாறிய பின் மாப்பிள்ளை அதைச் சுவைத்துப் பார்க்க வேண்டும். பிறகு மாப்பிள்ளை கை அலம்புவதற்கு பெண் நீர் ஊற்ற வேண்டும்.பிறகு மாமக்காரர்கள் இருவரும் மணமக்கள் தலைகளில் கொண்டை மாலைகளை மூன்று முறை மாற்றி மாற்றி வைப்பார்கள். பின்னர் பெண்ணின் தந்தை தலைச் சீலையில் பணம் முடிதல் வேண்டும்.மணமக்கள் முன் இருக்கின்ற முக்காலி மீது உள்ள சட்டியில் அரிசி, மஞ்சள், தேங்காய் இவைகளை வைத்து ஒரு பட்டுத்துணியால் (மாமப்பட்டு) இரு மாமக்காரர்களும் மூடினாற்போலப் பிடித்திருக்க, மணமக்கள் இருவரும் அதை எடுத்து மூன்று முறை மாற்றிக் கொள்ள வேண்டும்.பட்டுத் துண்டு போர்த்திய நிலையிலேயே மணமக்கள் இருவரும் எழுந்து அரசாணைக்காலையும் அக்னியையும் சுற்றி வலம் வந்து, நடு வீட்டில் சென்று அமர வேண்டும். மாமக்காரர் அந்தப் பட்டுத் துணியை விலக்கிய பிறகு அந்தப் பொருள்களை அங்கு வைத்துவிட்டு எழுந்து வெளியே வரவேண்டும்.

தலைச்சீலையில் முடிதல்:
மணமகளின் தந்தை தன் மகளை மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது வழிச் செலவுகளுக்கு கொடுக்கின்ற முதல் பணப் பரிசுதான் 'தலைச்சீலையில் முடிதல்' என்பதாகும். மணமகளின் தந்தை ஒரு சிறு தொகையை மணமகனின் தலையில் வைப்பார். அதனை எடுத்து மாமக்காரர் மணமகன் தந்தையிடம் கொடுத்துவிடுவார். பின்னர் இந்தத் தொகை மணமகளுக்கு கொடுக்கின்ற ஸ்ரீதனப் பணத்துடன் சேர்த்துக் கொள்ளப்படும்.

வேவு எடுத்தல்:
தலைப்பிள்ளைக்கு மட்டும் முதலில் மாம வேவு எடுத்தல் வேண்டும். அதற்கு பெண் வீட்டார் தயாரித்துள்ள பச்சரிசி, இலைக்கட்டு, பரங்கிக்காய், வாழைப்பழம், கற்கண்டு, மஞ்சள், பழங்கள் முதலியவற்றைப் பணியாட்கள் தலைமேல் வைத்து பெண்ணுக்கு ஆயாள் வீட்டுப் பங்காளிகள் எல்லோரும் மேள தாளத்துடன் கொண்டு வருவார்கள். பெண் வீட்டு முகப்புப் பத்தியில் கோலத்திற்கு முன்பாக அவர்களை நிற்கச் செய்து, பெண்ணின் அப்பத்தாள் குத்து விளக்கு வைத்து பின் தாய் மாமன் வீட்டு ஆண்கள் தலையில் புழுங்கலரிசி படி 2, தேங்காய் 2, கத்திரிக்காய் 2 கொண்ட வேவுக்கடகத்தைத் தலையில் வைத்துக் கொள்ள, முதலில் பெண்ணும், பிறகு அவள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் ஒவ்வொருவராக வந்து 5, 7, 9 என்ற ஒற்றைப் படை எண்ணிக்கையில் இறக்கி நடு வீட்டில் கொண்டு போய் வைத்து விடவேண்டும்.மாப்பிள்ளை தலைப் பிள்ளையாக இருந்தால் மாப்பிள்ளையின் ஆயாள் வீட்டாரும் இந்த வேவு எடுத்தல் வேண்டும். ஆயாள் வீட்டு ஆண்கள் தலையிலிருந்து மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் இறக்கவேண்டும்.பிறகு பெண் வீட்டார் 'கல்யாண வேவு' எடுத்தல் வேண்டும். கல்யாண வேவின் போது பெண் வீட்டு ஆண்களான பெண்ணின் தந்தை, பெண்ணின் பெரியப்பா, சித்தப்பா, பெண்ணின் அண்ணன், தம்பிகள், பெண்ணின் அண்ணன் தம்பி மகன்கள், பெண்ணின் அய்யாக்கள், வீட்டுப் பங்காளிகள், கூடிக்கிற பங்காளிகள், பெரும் பங்காளிகள் ஆகியோர் தலையில் வேவு கடகத்தை வைத்துக் கொள்ள மாப்பிள்ளை வீட்டுப் பெண்களான கல்யாணப் பெண், மாப்பிள்ளையின் தாயார், மாப்பிள்ளையின் ஆச்சி, தங்கைமார், மாப்பிள்ளையின் ஆச்சி தங்கச்சி மக்கள், மாப்பிள்ளையின் பெரியப்பச்சி, சித்தப்பார் மகள்கள் இறக்கி இருவருமாக நடு வீட்டிற்குள் கொண்டு போய் வைத்தல் வேண்டும்.மாப்பிள்ளை தலைப் பிள்ளையாக இருந்தால் மாப்பிள்ளையின் ஆயாள் வீட்டாரும் இந்த வேவு எடுத்தல் வேண்டும். ஆயாள் வீட்டு ஆண்கள் தலையிலிருந்து மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் இறக்கவேண்டும்.பிறகு பெண் வீட்டார் 'கல்யாண வேவு' எடுத்தல் வேண்டும். கல்யாண வேவின் போது பெண் வீட்டு ஆண்களான பெண்ணின் தந்தை, பெண்ணின் பெரியப்பா, சித்தப்பா, பெண்ணின் அண்ணன், தம்பிகள், பெண்ணின் அண்ணன் தம்பி மகன்கள், பெண்ணின் அய்யாக்கள், வீட்டுப் பங்காளிகள், கூடிக்கிற பங்காளிகள், பெரும் பங்காளிகள் ஆகியோர் தலையில் வேவு கடகத்தை வைத்துக் கொள்ள மாப்பிள்ளை வீட்டுப் பெண்களான கல்யாணப் பெண், மாப்பிள்ளையின் தாயார், மாப்பிள்ளையின் ஆச்சி, தங்கைமார், மாப்பிள்ளையின் ஆச்சி தங்கச்சி மக்கள், மாப்பிள்ளையின் பெரியப்பச்சி, சித்தப்பார் மகள்கள் இறக்கி இருவருமாக நடு வீட்டிற்குள் கொண்டு போய் வைத்தல் வேண்டும்.


கும்பிட்டுக் கட்டிக் கொள்ளுதல்:
மணவறை முடிந்து நெற்கோட்டை தாண்டி வீட்டிற்குள் சென்று வந்ததும், நடுவாசலில் மணமக்கள் வந்து, ஆளுக்கொரு நாற்காலியில் அமரவேண்டும். மாப்பிள்ளை, பெண் இரு வீட்டுப் பெற்றவர்களும், பெரியோர்களும் ஒவ்வொருவராக அவர்கள் முன்வந்து நின்றவுடன் மாப்பிள்ளை, பெண் இருவரும் கீழே விழுந்து வணங்கி வாழ்த்துப் பெறுதலே இந்நிகழ்ச்சி.

சீராட்டுக் கொடுத்தல்:
மணமகளுக்கு அவர் தகப்பனாரும் அவருடைய சகோதரர்களும் தருகின்ற பணம்தான் சீராட்டு. மணமகனை மணையில் உட்காரச் செய்து வள்ளுவப்பையில் (பாக்கு, மஞ்சள், எழுத்தாணி முதலியன வள்ளுவப் பையில் இருக்கும்) ஒவ்வொரு பெயராக படிக்க, மணமகளின் தந்தை ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு பிடிபாக்கு போடுவார்கள். இப்படி பிடிபாக்கு வள்ளுவப்பையில் போட்டதும் அதை கட்டி முடிந்து, தாம்பாளத்தில் வைத்துப் பெரியவர்களிடம் கொடுத்து, மணமகன் திரும்ப பெற்றுக் கொள்வார். கடைசியாக மணமகனை விட இளையவர் ஒருவர் மணமகனை வணங்க இருவரும் அதை கொண்டுபோய் நடுவீட்டில் வைத்துவிட்டு வருவார்கள். கடைசியாக கணக்குப் பார்த்து சீராட்டுப்பணம் ஸ்ரீதனத்துடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

மஞ்சள் நீராடுதல்:
மணமக்கள் இருவரும் நல்ல உடைகளைக் களைந்து விட்டு வேறு சாதாரண உடைகள் அணிந்து கொண்டு நடு வாசலில் ஒரு பெஞ்சின் மீது அமர வேண்டும். உள்ளூர் கோயில் வயிராவி மாப்பிள்ளைக்கு எண்ணை தொட்டு வைப்பார். பிறகு வயிராவி, கரைத்து வைத்திருக்கும் மஞ்சள் நீரை மாப்பிள்ளை, பெண்ணின் பாதங்களில் ஊற்றுவார். அப்போது மணமக்கள் தந்தையார் இருவரும் தங்களது ஆடை நுனிகளை மஞ்சள் நீரில் நனைத்துக் கொள்ளல் வேண்டும். இதுபோல் தாயார் இருவரும் மஞ்சள் நீரில் சேலை நுனிகளை நனைத்துக் கொள்ளல் வேண்டும். பிறகு மணமக்கள் நாணாளைக்குரிய புதிய ஆடைகளை அணிந்து கொள்ளவேண்டும். அதன் பிறகு மணமகள் வீட்டுப் பெரியவர்கள் நீராலாத்தி எடுப்பார்கள்.

நீராலாத்தி:
ஒரு சிறிய தாம்பாளத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு அதில் மஞ்சள் தூளையும், சுண்ணாம்பையும் கலந்து வெத்திலையை கிள்ளிப்போட்டிருப்பார்கள். இது செந்தூர் நிறத்தில் இருக்கும். இதுவே நீராலாத்தியாகும்.

காப்புக் கழற்றிக் கால் மோதிரம் அணிதல் (நாணாளைச் சடங்கு):
பெண்ணை மணை மேல் நிற்க வைத்து மாப்பிள்ளையின் தாயார் பெண்ணுக்குத் தன் கையில் அணிந்துள்ள காப்பைக் கழற்றி அணிவித்து, பெண்ணின் (இரண்டாவது) கால் விரல்களின் மிஞ்சி (கால் மோதிரம்) அணிவிக்கவேண்டும். பிறகு திருப்பூட்டிய பிறகு செய்து கொள்ளும் சடங்கைப் போல் மாப்பிள்ளையின் தாயார் சடங்கு செய்து கொள்ள வேண்டும்.

 காப்பு அவிழ்த்தல்:
மாப்பிள்ளை பெண் இருவருக்கும் அவரவர் மாமக்காரர்கள், இருவர்கையிலுள்ள ஐயரால் முடியப்பட்ட
 காப்பு இரண்டையும், தனித் தனியாகஅந்தந்த மாமக்காரர் அவிழ்த்து ஒரு தாம்பாளத்தில் 
வைத்துவிடவேண்டும்.

பிள்ளை எடுக்கிக் கொடுத்தல்:
சடங்குக் குழவியை சிகப்புத் துணியில் வைத்து அதைக் குழந்தையாகவேகருதி பெண்ணின் தந்தை 
எடுக்கிக் கொடுக்க, பெண் நமஸ்காரம் செய்துவாங்கிக் கொள்வதுதான் இச்சடங்கு. இதுபோல் பெண் வீட்டு 
ஆண்களில்முக்கியமானவர்கள் எல்லோரும் பிள்ளை எடுக்கிக் கொடுத்துஆசீர்வாதம் செய்யவேண்டும்.

அரசாணிக்குப் பொங்கல் இடுதல்:
பெண்ணின் அம்மான் மனைவி அரசாணிக்காலுக்கு முன் பொங்கல் இட்டுஇறக்கவேண்டியது. 
பிறகு அதை வண்ணாத்தியிடம் கொடுக்க வேண்டும்.

பெண் சொல்லிக் கொள்வது:
பெண் தாய் வீட்டிலிருந்து கணவன் வீட்டுக்குச் செல்ல இருப்பதால் தன்தாயிடமும் தாயதிகளிடமும்
 சொல்லிக் கொள்ள வேண்டும். பெண் நடுவீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பத்தியில் விரித்திருக்கும் பாய்
 ஒன்றில்கிழக்கு முகமாக கையில் வெற்றிலை பாக்குத் தாம்பாளத்துடன் நிற்கவேண்டும். 
பெண்ணின் பெற்றோர், உறவினர், பங்காளிகள்ஒவ்வொருவராக அந்தப் பாயின் மீதுஎதிரில் நிற்க, அவர்களிடம்வெற்றிலை
 பாக்குத் தாம்பாளத்தைக் கொடுத்து, அவர்கள் காலில்விழுந்துவணங்கி, சென்று வருகிறேன் என்று 
சொல்லி வாங்கிக் கொள்ளவேண்டும்.

குடி அழைப்பு:
பெண் சொல்லிக் கொண்டதும் மணமக்கள் இருவரும் நடு வீட்டில்உட்கார்ந்து இருந்து எழுந்து வந்து
 முகப்பு நடுப் பத்தியில் கோலத்திற்குமுன் வந்து நிற்பார்கள். பெண்ணுக்கு ஆயாள் வந்து சிலேட் விளக்குவைத்து, 
அழகு ஆரத்தி எடுத்து, விபூதி பூசி கட்டுச் சோறுடன் வழியனுப்பிவைப்பார்கள். மாப்பிள்ளைக்கு வலது பக்கம் நிற்கும்படியாக 
பெண்அழைத்துச் செல்ல வேண்டியது. இது சமயம் பெண்ணின் தாயார் பால்பானையை கையில் கொண்டு வரவேண்டும்.
மாப்பிள்ளையின் ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு ஊரணிக் கரையில்இறங்கி, கட்டுச் சோறு சாப்பிட்டு விட்டு மாப்பிள்ளை 
வீட்டுப் பங்காளிஒருவரது வீட்டில் தங்கி இருக்கவேண்டும். தற்பொழுது மாப்பிள்ளையின்ஊரில் கோவிலிலோ அல்லது பொது இடத்திலோ
 இருக்கிறார்கள்.

அரசாணிக்கால் அவிழ்த்தல்:
பெண்ணின் அம்மான் மனைவி அரசாணிக் காலுக்கு முன் பொங்கல்இட்டு இறக்கியதும், பெண் வீட்டுப் பங்காளிகள் 
அல்லது பெண்ணின்சகோதரர்களே சர விளக்கை மலை ஏற்றிவிட்டு சரவிளக்கை எடுத்துவைத்துவிட்டு அரசாணிக் காலில்
 உள்ள அரச இலை, மா இலை,கிளுவைக் கம்பு உள்பட யாவற்றையும் அவிழ்த்து விடவேண்டியது. பின்பங்காளி வீட்டுப் பையன்களில்
 ஒருவரை அழைத்து முளைப்பாரியைசர்வச் சட்டியில் வைத்து சிகப்புத் தோம்புத் துணி கொண்டு மூடி,ஊரணியில் அல்லது கிணற்றில் சங்கு
 ஊதிக் கொண்டுபோய்விட்டுவரவேண்டியது. கிளுவை பாலைக் கம்புகளை வீட்டுத்தோட்டத்தில் ஊன்றி வைக்கவேண்டியது.

திருமணத்தன்று மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும்நிகழ்ச்சிகள்
மாப்பிள்ளை வீட்டில் பெண்ணழைப்பு:
பெண் வீட்டிலிருந்து திருமணம் முடிந்து விடைபெற்று வந்த மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள், மாப்பிள்ளை வீட்டு வளவு வாசலில் கோலமிட்டு பெண்ணழைத்த பொங்கல் இட்டு, அடுப்பை அகற்றிவிடலாம். பெண்ணை அழைத்து வரும் சமயம் மூன்று இலையில் சாதம் படைத்து, ஒரு இலைக்கு 4 வாழைப்பழம், பருப்பு, நெய் ஊற்றிப் படையல் செய்து படைத்த இலைகளுக்கு முன் மூன்று தவலைகளில் தண்ணீர் வைத்து ஒன்றில் குலம் வாழும் பிள்ளையும், மற்றொன்றில் எழுத்தாணியையும் போட வேண்டும். பெண் மாப்பிள்ளை இருவரும் திருமணம் முடிந்துவந்து தங்கி இருக்கும் இடத்திலிருந்து, எல்லோரும் மேள வாத்தியங்களுடன் மணமக்களை ஊர்வலமாக மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும். வீட்டிற்குள் நுழையும் பொழுது முதலில் வலது காலை எடுத்து வைத்து நுழையும்படி முன்னதாகவே சொல்லி வைத்து அதன்படி மணமக்கள் செய்தல்வேண்டும்.பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்கு வந்ததும் முகப்பு நடுப்பத்தியில் கோலத்துக்கு முன்பாக நிறுத்தி, மாப்பிள்ளையின் அப்பத்தாள் அழகு ஆரத்தியும், பிள்ளையார் ஆரத்தியும் எடுத்து, விபூதி பூசி உள்ளே வந்ததும் படைத்த இலைக்கு முன்பாக கிழக்கு முகமாக நிற்கும்படி இரு தடுக்கைப் போட்டு ஒன்றில் சடங்கு செய்து கொள்பவர்களும், மற்றொன்றில் பெண்ணும் நிற்க வேண்டும்.