Tuesday, July 24, 2012


நலம் விரும்பும் நகரத்தார் குலம்…


“நாடு புகழ வாழும் இனம்,நல்லதையே செய்து
பழகிய இனம்,மன்னர் பின்னோராய் வாழும்
மரபுடையார்,மன்னருக்கு நிகராக,மார்தட்டி
நின்றவர்கள்

மன்னவர் பின்னோர் என்று புகழ்ந்து போற்றப்படும் நாட்டுக்கோட்டை நகரத்தார்தொன்றுதொட்டுஇன்றுவரைசிவநெறியிலும்,பண்பாட்டிலும்,சிறந்து விளங்கும் சமுதாயமாகும்.விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டும் நகரத்தாரே.சோழ மன்னர்களுக்கு மகுடம் சூட்டும் உரிமையும் ,பிரதான வைசியர் என்ற பட்டமும்,சிங்கக் கொடியும்,வீடுகளுக்கு தங்க கலசம் வைக்கும் உரிமையும் பெற்றதில் இருந்து நகரத்தார் பெருமையும் ,செல்வச் செழிப்பையும் அறியலாம்.

சிறுபான்மை இனத்தவரேஆயினும் சமுதாயக்கட்டுக்கோப்பும், சத்தியம், நேர்மை, தர்மம், விடாமுயற்சி ஆகிய குணங்களால் மக்களாலும்,அரசாங்கத்தாலும் மதிக்கப்படுகிறார்கள்.
தெய்வத் தொண்டோடு,சமுதாயப் பணியிலும்,பல அறப்பணிகள் செய்து வந்துள்ளார்கள்.காலத்தின்மாறுதலுக்குஏற்பநந்தவனம்,தண்ணீர்பந்தல்,
பள்ளிக்கூடங்கள்,கல்லூரிகள்,மருத்துவமனைகள் என சமுதாய தேவை அறிந்து தர்மம் செய்து வருகிறார்கள்.
கல்வி நிறுவனங்கள் பணம் கொட்டும் தொழிற்சாலையாக மாறிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் ,எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல்,லாபநோக்கம் சிறிதுமின்றி தமிழகமக்களின் உயர்கல்வி வளர்ச்சிக்காக ,அக்காலத்தில் பல கல்விச்சாலைகளை நிறுவிய பெருமை நாட்டுக் கோட்டை நகரத்தாருக்கு உண்டு.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்,மதுரை தியாகராஜா கல்லூரி கணேசர் செந்தமிழ் கல்லூரி ஆகியவை நகரத்தாரின் கல்விக்கொடைக்கு சான்றுகள்.
அன்னச்சத்திரம் ஆயிரம் நாட்டலில்
ஆலயம் பதினாயிரம் நாட்டலிற்-சிறந்தது
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்ற கூற்றிற்கு ஏற்ப பல கல்வி நிலையங்களை நிறுவி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள்.தமிழக மக்களின் கல்விக் கண் திறந்த முன்னோடிகளில் ஒரு சிலரைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ராம.அழகப்பச் செட்டியார் ஓர் இந்திய தொழிலதிபரும் வள்ளலும் ஆவார்.விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளையும் ஆய்வுக்கூடங்களையும் தமது செலவில் நிறுவி தமிழகம் இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர்.1947ஆம் ஆண்டு நடந்த அன்னி பெசண்ட் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இந்தியாவில் கல்வியை வளர்க்க தொழிலதிபர்களுக்கு விடுத்த அழைப்பினை ஏற்று காரைக்குடியில்காந்திமாளிகையில் அழகப்பா கலைக்கல்லூரியை மூன்று நாட்களுக்குள் நிறுவினார்.15 இலட்சம் ரூபாய் [அன்றையமதிப்பு]மதிப்புள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பினை நன்கொடையாக அளித்து நடுவண் அரசின் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவ இணங்கச் செய்தார்.இவரது இந்த நன்கொடையைப் பாராட்டி நேரு இவரை சோசலிச முதலாளி என்று புகழ்ந்தார்.1953ஆம் ஆண்டுசனவரி 14 அன்று இந்நிலப்பரப்பில் மத்திய மின் வேதியியல் ஆய்வுக் கழகத்தை (CECRI)இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.தமது அரண்மனை போன்ற கோட்டையூர் இல்லத்தையே ஓர் பெண்கள் கல்லூரி நிறுவ வழங்கியது இவரது வள்ளல்தன்மைக்கு சிகரமாக அமைந்தது.

அண்ணாமலை செட்டியார்:1920ம் ஆண்டு மீனாட்சி கல்லூரிஎன்ற பெயரால் துவக்கிய கல்லூரியையும் 1500 ஏக்கர் நிலத்தையும் 25 லட்சம் நிதியையும் 1929ம் ஆண்டு அரசுக்கு இவர் கொடையாக வழங்கியதன் அடிப்படையில்அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாயிற்று.அன்று முதல் இன்று வரை லட்சக்கணக்கானோர் கல்வி பயிலக் காரணமாக இருந்தவர்.

கருமுத்து தியாகராஜன் செட்டியார், கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் .  கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவியவர்.

நகரத்தாரால் ஆரம்பிக்கப்பட்ட பல பள்ளிகள்,கல்லூரிகள் இன்றும் ,எவ்விதலாப நோக்கமும் இல்லாமல் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.நகரத்தார் கல்விப்பணியில் மட்டுமல்லாமல் பல திருப்பணிகளும் செய்துள்ளனர்.பல கோயில்கள் கட்டியுள்ளனர்.பழைய கோயில்களை புனரமைத்துள்ளனர்.அன்னதானம் செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்.இப்படி நகரத்தாரின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ,அவர்களின் அரண்மனை போன்ற வீடுகளும்,அவர்களின் நளபாகமும்,விருந்தோம்பலும் வியக்கதக்கவை.

No comments:

Post a Comment