Thursday, February 9, 2012

கண்ணதாசனின் வாழ்க்கைக் குறிப்பு

வாழ்க்கைக் குறிப்பு

நன்றி  விக்கிபீடியா
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் கம்பனியில் பணியில் சேர்ந்தார்.
கண்ணதாசனின் முதல் மனைவி பெயர் பொன்னம்மா. இரண்டாம் திருமணம் பார்வதி என்பவரை செய்து கொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள் பிறந்தன. ஐம்பதாவது வயதில் வள்ளியம்மையை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்தவர் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்.
இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

மறைவு

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20 இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இந்த அரங்கம் அரசு நிகழ்ச்சிகளுக்கு நாள் ஒன்றுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.600/-ம், தனியார் நிகழ்ச்சிகளுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.750/-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

கண்ணதாசனின் மருமகள் மான்மியம்



மாமியாருக்கு மருமகள் சொல்லும் பதில். இந்த இருதரப்புக்கும் நடுவே வாழும் அந்த பாவப்பட்ட ஜீவனை என்னவென்று சொல்வது ..!

மருமகள் சொல்லும் பதில் இதோ ..,!

  அவகெடக்கா சூப்பனகை
அவமொகத்தே யாருபாத்தா

அவுகமொகம் பாத்து
அடியெடுத்து வச்சேன்நான்

பத்து வராகன்
பணங்கொடுத்தா எங்களய்யா

எத்தனைபேர் சீதனமா
இவ்வளவு கண்டவுக?

ராமாயணத்திலயும்
ராமனுக்கு சீதைவந்தா

சீதனமா இவ்வளவு
சேத்துவச்சா கொண்டுவந்தா?

கப்பலிலே ஏத்திவச்சா
கப்பல் முழுகிவிடும்

அவ்வளவு சாமான்
அரிசி பருப்புவரை

மாவு திரிச்சுவச்சு
மலைமலையா அடுக்கிவச்சு

ஊறுகாய் அத்தனையும்
ஒண்ணுவிடாமவச்சு

நாக்காலி முக்காலி
நாலுவண்டி ஏத்திவச்சு

பாயும்தலையணையும்
பலவகையா கட்டிவச்சு

ஆளுவீடடங்காத
அழகான பீரோவும்

கண்ணாடிச்சாமானும்
கனத்தவெள்ளி பாத்திரமும்

அம்மிகுழவி
ஆட்டுக்கல் அத்தனையும்

கட்டிகொடுத்து
என்னை கட்டிக்கொடுத்தாக

வைரத்தால் கண்டசரம்
வளைககப்பு மோதிரங்கள்

சிறுதாலி பெருந்தாலி
சுட்டியெல்லாம் செஞ்சாக

தூக்கமுடியாம
தூக்கு கழுத்தூரு

முந்நூறு பவுனுக்கு
முள்ளங்கி பத்தைப்போல

எங்கையா ஆத்தா
எனக்குக் கொடுத்தாக

ஒருவேலை சோத்துக்கும்
உதவியில்லை இவ்வீட்டில்

மாமியார் இண்ணு சொல்லி
மாரடிச்சு என்னபண்ண?

கல்யாணியாச்சியும்தான்
கட்டிவிட்டா தன் மகளை

ஒருபொட்டுதாலி
ஒருவேளைச் சாப்பாடு

அதுமாதிரி இவளும்
அடைஞ்சிருக்க வேணுமடி

சம்பந்தம் பண்ணவந்தா
சண்டாளி சூப்பநகை

வேறேவைக்க நாதியில்லை
வீடில்லை வாசலில்லை

சோறுவைக்க பானையில்லை
சொத்துமில்லை பத்துமில்லை

புள்ளைதான் பெத்துவச்சா
பெண்ணோடு சோறு வர

தலைகாணிமந்திரமாம்
சங்கதிய கேலுங்கடி

பெண்டாட்டி சொல்கேக்க
புத்தியில்லா ஆம்பிளையா?

வீட்டு மருமகளா
வெளக்கேத்த வந்தவளை

சக்கதளத்தி போல நெனைச்சு
சதிராடுகின்றாளே

எங்களுக்கும் அண்ணந்தம்பி
ஏழுபேரு இருக்காக

அவுகளுக்கு பெண்ணாட்டி
அணியணியா வந்தாக

எங்காத்தா ஒருவார்த்தை
எடுத்தெறிஞ்சு பேசவில்லை

என்னைப்போல் பெண்ணாக
எண்ணிநடந்தாக

சனியம் புடிச்ச
என் தலையில்வந்து உக்காந்தா

மாமியார்க்கரியின்னா
மனசிரக்கம் கூடாதா

சாமியாரா ஆக
தன்மகனை விட்டிருந்தா

நாம ஏன் இங்கவந்து
நாத்தசோறுங்கோணும்?

அவுகளுக்கு நாஞ்சொல்லி
அலுப்பா அலுத்துவிட்டேன்

செவிடா இருக்காக்
சேதிசொல்ல எண்ணமில்லே

பட்டதெல்லாம் போதும்
பகவானே இங்கவந்து!

சட்டியிலே பொட்டு
தாளிச்சு கொட்டிவிட்டா

வட்டியிலே போட்டு
ஒரு வாய்ச்சோறு வைக்கையிலே

கொட்டுகிறா கொட்டு
தேள்கூட கொட்டாது

அவளுக்கழுவேனா
அன்னாடம் புள்ளைகொண்ட

சீக்குக்கு அழுவேனா
தினமும் கவலையடி

கோட்டையூர் அம்மந்தான்
கூலிகொடுக்கோணும்

பொன்னரசி மலையரசி
பு த்தி புகட்டோணும்

எங்க சொகங்கண்டேன்
இங்குவந்த நாள்முதலா?

கடவுளுக்கு கண்ணிருந்தா
காட்டுவான் கண்ணெதிரே

வத்தக்குழம்பு
வறுத்துவச்ச மொளகாயும்

பத்தியம்போல் சாப்பிடத்தான்
பாவி இவ வீடுவந்தேன்

தம்பி மகளை எண்ணி
தாளமில்லே கொட்டுறா

நம்பி அவளும்வந்தா
நாயாப்போயிருப்பா

கும்பி கருகி
குடல்கருகி நின்னிருப்பா

வெம்பி வெதும்பி
வெளக்குமாறாயிருப்பா

தம்பி மகளாம்
தம்பிமக தெரியாதா?

நாமா இருந்தமட்டும்
நாலுழக்கு பாலூத்தி

தேனா கொடுத்து இவள
திமிர்புடிக்க வச்சிருக்கேன்

போனாபோகட்டுமிண்ணு
பொறுத்து கெடந்தாக்க

தானான கொட்டுகிறா
தடம்புரண்டு ஆடுகிறா

அவதலைய போட்டாத்தான்
ஆத்தா எனக்கு சொகம்

எப்பவருவானோ
எடுத்துக்கினு போவானோ

இப்பவா சாவா?
இழுத்து வலியெடுத்து

கெடையாகெடந்து
கிறுக்கு புடிக்காமே

சாகவே மட்டா
சத்தியமா நான் சொல்றேன்

எங்க கொலதெய்வம்
இருந்தா பழிவாங்கும்

பங்காளி மக்களெல்லாம்
பாக்க பழிவாங்கும்

படுத்துனா மருமகள
படுத்துட்டா இண்ணு சொல்லி

நடுத்தெருவில் நிண்ணு
நாலுபேர் சிரிப்பாக

பாக்கத்தான் போறேண்டி
பாக்கத்தான்போறேன்நான்

ஒருத்தனுக்கு முந்தானை
ஒழுங்காநான் போட்டிருந்தா

இருக்கிற தெய்வமெல்லாம்
எனக்காக கேக்கோணும்

அவகெடக்கா சூப்பநகை
அவமொகத்த யார்பாத்தா?

கண்ணதாசனின் மாமியார்மான்மியம்


கண்ணதாசன் கவிதைகளில் என்னைக்கவர்ந்த கவிதைகளில் ஒன்று இது. இத்தகைய மரபுக்கவிதைகளில் நுண் அர்த்தங்களும் ஆழ்பிரதிகளும் இல்லை. நேரடியானவை. இந்தக்கவிதையில் எங்கள் மண்ணின் செட்டிநாட்டு அடையாளம் உள்ளது. கவிஞரின் அபாரமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளது. அந்த மாமியாரின் மாய்மாலமெல்லாம் சொற்களிலேயே வெளிப்படுகிறது.
கவிமணியின் நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு கவிஞர் இதை எழுதியிருக்கிறார் எங்கள் செட்டிநாட்டு கவிஞர் .

இதோ அந்த கவியின் சொல்லோவியம் உங்களுக்காக !

நல்லாத்தான் சொன்னாரு...
நாராயணச் செட்டி!

பொல்லாத பெண்ணாக
பொறுக்கி வந்து வச்சாரு

வல்லூறைக் கொண்டு வந்து
வாசலிலே விட்டாரு

கல்லாப் பொறந்ததையும்
கரும்பாம்புக் குட்டியையும்

செல்லாப் பணத்தையும்
செல்ல வைச்சு போனாரு

ஊரெல்லாம் பெண்ணிருக்கு
உட்கார வச்சிருந்தா

தேரெல்லாம் ஓடிவந்து
திருவிழாக் கோலமிடும்.

எட்டுக் கண் விட்டெரிக்க
எந்தம்பி மகளிருக்க

குத்துக் கல்போலே ஒண்ணெ
கூட்டிவந்தோம் வீடுவரை!

ஆறாயிரம் வரைக்கும்
அள்ளி வச்ச சீதனமும்

ஆறு வண்டி சாமானும்
அடுக்கி வைக்க பாத்திரமும்

சொக்க வெள்ளிப் பால்குடமும்
சோதி மின்னும் ரத்தினமும்

பச்சரிசி மூட்டையுடன்
பருப்பு வகை அத்தனையும்

எட்டுக்கல் மூக்குத்தியும்
ஏழு பவன் சங்கிலியும்

கண்டசரம் தோடு
காப்பு வைர மோதிரமும்

கண்டாங்கிப் பட்டுவகை
காசியிலே நெய்த பட்டு

மெத்தையுமே பத்துவகை
விரிச்சு வைக்க கம்பளமும்

தேக்கு மரம் கடைஞ்சு
செஞ்சு வச்ச பீரோவும்

தந்திருப்பான் எங்க தம்பி
தன் மகளை தந்திருந்தா

வந்தாளே காலியம்மா
வாய்க்கரிசி இல்லாமல்

அப்பன் கொடுத்தா சொத்து
ஆறுநாள் தாங்காது

கப்பலிலே வருகுதூணு
கதையா கதைபடிச்சான்

கண்ணா வளத்த பிள்ளை
காலேசிலே படிக்க வைச்சு

மண்ணாளும் ராசாபோல்
வளர்ந்ததடி என்வீட்டில்

பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே

தம்பிமக சமைச்சா 
சபையெல்லாம் வாசம் வரும்

அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்

உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்

கத்தரிக்காக் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்

வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி

கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!

அப்படி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே

அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே

உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே

இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து

முருங்கையிலே கீரை
முளையாய் முளைச்சதடி

விடிஞ்சா எந்திரிச்சா
வேறுகாய் இல்லையடி

குப்பையிலே கீரை
கொத்தாய் கிடைச்சதடி

அப்பா இவ எடுத்து
அகப்பையிலே கிண்டி விட்டு

சப்பாத்திக் கள்ளியை போல்
தையல் இலை போட்டு

வச்சாளே! சாமி இந்த
வலுசாரத் தந்தானே

வந்த நாள் தொட்டு
என் மகனைப் பிரிச்சு வைச்சா

எந்த நாள் பாவமோ
இப்ப வந்து சுத்துதடி

தலைக்காணி மந்திரத்தால்
தாயை மறக்க வச்சா

கொலைக்காரி வந்து எங்க
குடும்பம் பிரிச்சுவைச்சா

மலையரசி காளி எங்க
மாரியம்மா கேக்கோணும்

பலகாரம் தின்பதற்கும்
பசியே எடுக்கலைடி

ராசாக் கிளி போலே
நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்

பேசாக் கிளியாச்சு
பெண்டாட்டி நினைவாச்சு

ஊசப் பணியாரம்
உளுந்த வடைக்கு ஊசலடி

பாருடாண்ணு சொன்னா
பாக்காம போறாண்டி

கேளுடாண்ணு சொன்னா
கேக்க மனம் இல்லியடி

எப்பவோ நானும்
இது வரைக்கும் வாழ்ந்தாச்சு

கொப்பாக எங்களைய்யா
கொடுத்தத நான் வச்சிருந்தா

இப்பாவி கையாலே
இழிசோறு திங்கணுமா

ஆத்தா கொடுத்தாளே
ஆறு தலைமுறைக்கு

ஐயா கொடுத்தாரே
ஐநூறு பொன் வரைக்கும்

பூமி கொடுத்தாரே
போட்டாக்க பொன் விளைய

சாமி கொடுத்ததுபோல்
தாய் தகப்பன் தந்ததெல்லாம்

பாவி மகன் வாழ
பகுந்து கொடுத்தேனே

நீட்டி படுக்கும்வரை
நிம்மதியா வாழ்ந்தேனா

ஊட்டி வளத்த பிள்ளை
ஒரு வார்த்தை கேட்டானா

எல்லாம் முடிஞ்சதடி
எமன் வந்தால் போதுமடி

பல்லாக்கு தூக்கி
பரிவாரம் தூக்கி வந்து

பச்சை மரம் வெட்டி
பட்ட விறகடுக்கி

வச்ச பின்னே மீண்டும்
வாழ வரப் போறேனா

கொள்ளி வச்சு தலமாட்டில்
குடமுடைக்க வந்த பிள்ளை

பள்ளி வரை என்னை
பாத்து வச்சு காத்தானா

தேவி விசாலாட்சி
தென்மதுரை மீனாட்சி

காவலுக்கு நீதான்
கடைசி வரை வேணுமடி

ஒரு மகளைப் பெத்தேனா
உதவிக்கு வேணுமின்னு

மருமகளை நம்பி நின்னேன்
மகராசி பேயானா

நல்லாத்தான் சொன்னாரே
நாராயணன் செட்டி!

Monday, February 6, 2012

நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்




நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்


நன்றி : விக்கி பீடியா
நகரத்தார் மரபு ஆண்களை- செட்டியார் என்றும்; நகரத்தார் என்றும் பெண்களை- ஆச்சி என்றும் பொதுப்பெயரிட்டு பிற குலத்தார் அழைக்கின்றனர்.இவர்களுக்குள்ளும் இப்பொதுப்பெயர் நிலவி வருகின்றது.அம்மாள் என்று மற்ற குலங்களில் அழைக்கப்பெறும் பெண்பால் பொதுப்பெயர் இக்குலத்தில் ஆச்சி என அழைக்கப் பெறுவது தனித்தன்மை உடையதாக இருக்கின்றது. செட்டியார், நகரத்தார் என்ற ஆண்பாற்பெயர்கள் அவர்களின் குலம் குறித்தமைந்த பெயர்களாகும். ஆனால் ஆச்சி என்ற பெண்பாற்பெயர் பெண்களுக்கு வழங்கப்பெறுவது வரலாற்று அடிப்படையானது ஆகும்.
ஒருகாலத்தில் வணிக குல ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காத சூழலில் அவர்கள் வெள்ளாள(வேளார்) குலப் பெண்களை திருமணம் செய்துகொண்டனர். அவ்வகையில் கார்காத்த வெள்ளாளர் பெண்களை மணந்த வணிகர்கள் அரிவைநகரத்தார் எனப்பட்டனர். சோழிய வெள்ளாளர் பெண்களை மணந்தவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்பட்டனர். காணிய வேளாளப் பெண்களை மணந்தவர்கள் சுந்தர நகரத்தார் எனப்பட்டனர். பெண்களை இவ்வாறு குலம் மாறி எடுத்துக்கொண்டாலும் இவர்கள் அடுத்த வாரிசுகளில் எம்குலப்பெண்களை வெள்ளாளக் குலத்திற்குத் தரமாட்டோம் என்ற உறுதியோடு இவர்கள் அப்போது பெண்கொண்டனர்.
இப்படி வேற்று ஆயத்தில் இருந்து பெற்ற பெண் என்ற குறிப்பை உட்கொண்டு வேற்று ஆயத்தாள் என்ற பெயர் அப்பெண்களுக்கு வழங்கப்பெற்று ஆச்சி என்று மருவி வந்திருக்கலாம் என்பது ஒருவகை. காலப்போக்கில் மருதநில மக்களான வேளாண் குலத்தவரே முல்லை நிலத்தார் செய்யும் தொழில்களான மாடு வளர்த்தல், பால் தயிர் விற்றல் முதலான தொழில்களைச் செய்து வந்ததால் ஆயர், ஆய்ச்சியர் என்ற முல்லை நிலப்பெயர்கள் மருத நிலத்தார்க்கு வழங்கப்பட அக்குலம் சார் பெண்களைப் பெற்றதனால் நகரத்தார் வேளாளப்பெண்களை ஆச்சி என அழைத்திருக்கவேண்டும். இவ்வாறு நகரத்தார் குலப்பெண்கள் ஆச்சி எனப்பட்டிருக்கலாம் என்பது இன்னொருவகை. எவ்வகையாயினும் ஆச்சி என்ற பொதுப்பெயர் நகரத்தார் இனத்துப் பெண்களுக்கான தனித்த பெயராக வழங்கி வருவது கருதத்தக்கது.
தற்போது ஆச்சி மோர், ஆச்சி சம்பார்பொடி ஆகியன விற்பனைக்கு வருகின்றன. அவை செட்டிநாட்டு சமையல் கருதி தயாரானவை என்பதை மறைமுகமாகக் காட்டிநிற்கின்றன. ஆச்சி வந்தாச்சு என்ற நகரத்தார் குல இதழ் தற்போது வெளிவந்து கொண்டுள்ளது. இவற்றின் வழி ஆச்சி என்றபெயர் பெறும் சிறப்புக்களை உணரமுடியும்.

 குடும்பப் பெயர்கள்

இவர்களின் குலத்தில் குடும்பப் பெயர்கள் மிகவும் எளிமையான கட்டமைப்பின; காரண காரியம் மிக்கன; ஒரே அமைப்பின. அவற்றில் சில பெயர்கள் இங்குக் காட்டப் பெற்று அவற்றின் பொதுமைகள் ஆராயப் பெறுகின்றன.
தந்தை- அப்பச்சி எனவும் தாய்- ஆத்தாள் எனவும் அழைக்கப்பெறுகின்றனர். மகன், மகள் பெயர்களில் மாற்றம் இல்லை. மகனின் மனைவி- மகம்மிண்டி (மகன் பெண்டிர்) என அழைக்கப்பெறுகிறாள். பெண்டிர் என்ற சொல் பெண்பெயர்களுக்கான பின்ஒட்டு ஆகும். பெண்டிர் என்றால் பெண் எனப்பொருள்படும். இச்சொல் மரியாதைப் பன்மை கலந்த சொல்லாகும். எனவே பெண்களை மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இக்குலத்தாரிடம் உள்ளது என்பதை உணரமுடிகின்றது. மகளின் கணவர்- மாப்பிள்ளை? மருமகன் எனப்படுகின்றார். இவைபோல பின்வரும் பெயர்களும் காணத்தக்கன.
அண்ணன்- அண்ணன், அண்ணன் மனைவி- அண்ணமிண்டி (அண்ணன் பெண்டிர்), தம்பி- தம்பி, தம்பி மனைவி- தம்பியொண்டி(தம்பி பெண்டிர்), பேரன்-பேரன், பேரன்மனைவி- பேரம்பிண்டி(பேரன்பெண்டிர்), மாமா-அம்மான், மாமா மனைவி- அம்மாம்மிண்டி (அம்மான் பெண்டிர்), அத்தை-அயித்தை, அத்தைமகள்- அயித்தியாண்டி(அத்தையாள் பெண்டிர்), கணவனின் தம்பி,அண்ணன் ஆகியோர்-கொழுந்தனார்- கொழுந்தனாவண்டி (கொழுந்தனார் பெண்டிர்)என்பன ஒரே அமைப்பின. இவற்றில் பெண்டிர் என்ற சொல் அதன் முன்சொல்லுக்கு ஏற்றார்போல், மிண்டி, யாண்டி, யொண்டி, மிண்டி ஆகிய ஈறுகளாகப் பேச்சு வழக்கில் திரிந்துள்ளமை கவனிக்கத்தக்கது.
இன்னும் சில குடும்பப் பெயர்கள் வேறு அமைப்பில் உள்ளன. அம்மாவைப் பெற்ற அம்மா- ஆயா எனவும், அப்பாவைப் பெற்ற அம்மா- அப்பத்தா (அப்பனைப் பெற்ற ஆத்தாள்) எனவும் அழைக்கப் பெறுகின்றனர். அப்பா, அம்மா இருவரையும் பெற்ற தாத்தா- ஐயா என்றே பொதுப்பெயரால் அழைக்கப்பெறுகிறhர்.
மாமானார்-சம்பந்தியான், மாமியார்-சம்பந்தியாள் என்பன எதிர் உறவுமுறையினரைக் குறிக்கும் பெயர்களாகும். இவை தவிர மற்றொரு பெண்ணின் கணவனைக் குறிக்கையில் ஆம்பிடையான் என்ற சொல் கொண்டு குறிப்பிடுவதும் உண்டு.
கணவனும், மனைவியும் -ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கையில் ஏங்கறேன் என்ற பேச்சு வழக்கு நகரத்தார் மரபில் காணப்படுகிறது. ஏன் என்கிறேன் என்ற சொல்லின் திரிபாக இதனைக் கொள்ளலாம்.
மகனுக்கு அவனின் தந்தைவழி தாத்தா (ஐயா) பெயரிடப்படுகையில், அதனை அவனின் அம்மா(ஆத்தாள் ) அழைப்பது மரியாதைக் குறைவு எனக் கருதி நகரத்தார் பெண்கள் அழைப்பதில்லை. மாறாக தம்பி என்றோ, வேறு ஒரு பெயர் கொண்டோ அழைப்பது முறைமையாக உள்ளது. அதுபோலவே அப்பத்தா பெயரை மகளுக்கு இடுகையில் அதனை அழைப்பதும் மரியாதைக்குறைவு என்பதால் வேறுபெயர் கொண்டோ அல்லது ஆத்தாள் என்றோ அழைப்பதும் முறைமையாகும்.
இதே போல இரண்டாவது மகன், மகள் பிறக்கையில் மாமானார், மாமியார் பெயர் சூட்டப்படுகையில் அதனை அழைப்பது மரியாதைக்குறைவு எனக்கருதுவதால் கணவனும் வேறுபெயர் இட்டு அழைப்பதும் வழக்காக உள்ளது. எனவே நகரத்தார்குல எல்லா பிள்ளைகளுக்கும் இருபெயர்கள் இருப்பது தவிர்க்கமுடியாததாகி விடுகின்றது.
இவ்விருபெயர்களும் திருமண அழைப்பிதழ் முதலாக பதிவு பெற வேண்டிய இடங்களில் பதியப்பெறுகின்றன என்பது குறிக்கத்தக்கது.
அண்ணன் என்ற சொல் நகரத்தார் மக்களிடையே பேச்சு வழக்கில் அதிகம் பயன்படும் சொல்லாகும். வயதில் மூத்த ஆண்களை அண்ணன் என்பது பொதுவழக்காகும். வயதில் குறைந்த ஆண்களை தம்பி என்றழைப்பதும் பொதுவழக்காகும். வயதில் மூத்த பெண்பிள்ளைகளை ஆச்சி என அழைப்பதும், வயதில் குறைந்த பெண்பிள்ளைகளை தங்கச்சி என்றழைப்பதும் பொதுவழக்கிற்கு உட்பட்டதே ஆகும். இவ்வழக்குகள் செட்டிநாட்டுப்பகுதிகளில் வாழும் பிற இனத்தாரிடத்திலும் காணப்பெறுகின்றன.
மனைவியுடன் பிறந்த ஆண்- மச்சான், மைத்துனன் என அழைக்கப்படுவதும், கணவனுடன் பிறந்த பெண்கள் நாத்தனார் எனப்படுவதும், பிற குலத்தினரால் அழைக்கப்பெறும் பான்மையினவே.
மேலும் முறையினர் பலராக இருக்கும் போது அவர்களை வயது அடிப்படையில் பெரிய, சிறிய என்ற அடைகளுடன் அழைக்கும்முறை இவர்களிடம் காணப்பெறுகின்றது.
எடுத்துக்காட்டிற்காக சின்ன (சிறிய) ஆயா, பெரிய ஆயா; சின்ன ஆத்தாள், பெரிய ஆத்தள் முதலியனவற்றைக் காட்டலாம்.
நெருங்கிய உறவினர் பெரியப்பா, சித்தப்பா போன்ற தந்தைவழிப்பட்ட நெருங்கிய உறவினர்கள் வளவினர் எனப்படுகின்றனர். வளவு என்பது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பங்காளிகள் அனைவரும் ஒரு வளைவிற்குள் வாழ்ந்தனர் என்ற அடிப்படையில் உருவான வளைவு என்ற சொல்லே பின்னர் வளவு என மருவியது என்பர் . இதனடிப்படையில் தந்தைவழிப்பட்ட நெருங்கிய உறவினரைக் குறிக்கும் சொல் வளவினர் ஆயிற்று.
தாய் வழிப்பட்ட நெருங்கிய உறவினர் தாய்பிள்ளைகள் என அழைக்கப் பெறுகின்றனர். பெரும்பான்மை இச்சொல் தாய் வழிப்பட்ட உறவினரைக் குறித்தபோதும்- சிறுபான்மை தந்தை உறவினர்க்கும் உரிய தாகின்றது. தாய்பிள்ளைகள் என்ற இச்சொல் தூய தமிழ் அடிப்படையில் அமைந்த காரணகாரியமிக்க இணைப்புச்சொல்லாகும். இச்சொல் பங்காளிகள் அல்லாத உறவுமுறையினர்க்குரியதாகும்.

தூரத்து உறவினர்

தூரத்து உறவினர் பங்காளிகள் எனப்படுகின்றனர். இவர்களுள் சில வகைகள் உண்டு. அவை பங்காளிகள், கோயில் பங்காளிகள், ஊர் பங்காளிகள், கூடிக்கொள்கின்ற பங்காளிகள் என்பனவாகும்.

பங்காளிகள்

பங்காளிகள் என்போர் தந்தைவழியில் உறவுமுறையினர் ஆவர். இவர்கள் திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சிகளிலும், இறப்பு முதலான துயர நிகழ்ச்சிகளிலும் முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் இன்றி எந்நிகழ்வும் இக்குலமுறையினரிடம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] கோயில் பங்காளிகள்

கோயில் பங்காளிகள் என்போர் கோயில் உறவால் உறவினர் ஆவோர் ஆவர். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் சார்ந்த குடிகள் ஆவர். இவர்கள் ஒன்பது நகரக்கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவனர் ஆவர். அவை இளையாற்றங்குடி, மாற்றூர், நேமம், இரணியூர், பிள்ளையார்பட்டி, இலுப்பைக்குடி, சூரைக்குடி, வைரவன் கோயில், வேலங்குடி என்பனவாகும்.
இச்சிவன்கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவாகியுள்ள இக்குலத்தார், இவர்களுக்கான பூர்வீக ஊர்களில் வாழ்ந்துவருகின்றனர். பலஊரினர் ஆனாலும் கோயில் அடிப்படையில் இவர்களிடத்தில் உறவு உண்டு. இவ்வுறவே கோயில்பங்காளிகள் என்னும் உறவாகின்றது.

 ஊர்பங்காளிகள்

ஓரூர் சார்ந்த நகரத்தார்கள் தம்மை ஓரூர் பங்காளிகள் எனப் பெருமையோடு அழைத்துக்கொள்ளுகின்றனர். வெளியூர்களில் வேலையில் அமர்ந்த நகரத்தார் பெருமக்கள் ஊர் சார்ந்து ஒருமைப்படுவதற்கு இம்முறை பெரிதும் உதவுகின்றது. வழி, வழி மரபாக வாழ்ந்த இவ்வூர் இணைப்பு தவிர, வாழும் ஊர்களிலும் இம்முறை தொடர்கின்றது. எடுத்துக்காட்டாக கோயம்புத்தூரில் வாழும் பல ஊர் நகரத்தார்கள் ஒன்று சேர்ந்து நகரத்தார் சங்கம் என்ற அமைப்பைத் தங்களுக்குள் அமைத்துக் கொள்ளும்போது அவர்கள் கோயில், மரபு தாண்டி மற்றொரு உறவுமுறைக்குள் நெருக்கமாகின்றனர். இவ்வுறவுமுறையே தற்போது பெருமளவில் வெற்றிபெற்றுத் திகழ்கின்றது. நகரத்தரார் சங்கங்கள் மூலமாக உலக அளவில் கூட பல ஊர்களில் நகரத்தார்கள் ஒருங்கிணைகின்றனர். இச்சங்கங்கள் மூலமாக அவர்கள் பல அறப்பணிகளையும் சமுதாயப் பணிகளையும் செய்து வருகின்றனர்.
இவ்வாறு கூட்டம் கூட்டமாக- வளவு அடியாகவும், கோயிலடியாகவும், மரபூர் அடியாகவும், வாழுமமூர் அடியாகவும் வாழும் முறைமை இச்சமூகத்தாரின் இனக்கட்டுமானத்திற்கு இன உணர்விற்கு எடுத்துக்காட்டாகின்றது. எனினும் இவர்களின் இனஉணர்வு மென்மையானது மேன்மையானது என்பதும் இங்கு எண்ணத்தக்கது.

 புள்ளி

புள்ளி என்ற இச்சொல் நகரத்தார் மரபில் மிகவும் பொருளுள்ளது ஆகும். திருமணமான நகரத்தார் ஆண்பிள்ளை ஒரு புள்ளியாக கணக்கில் கொள்ளப்பெறுகின்றனர். இதன்பின் இவர் ஊர்ப் பொதுக்காரியங் களுக்கான புள்ளிவரி கட்டவேண்டும். திருமணம் முதலான நிகழ்ச்சிகளில் தனிக் குடும்பமாகக் கருதப்பட்டு அவர் பெயருக்கு அழைப்பு தரப்பெறும். அவர் பெயரில் மொய்ப்பணம் பெறப்பெறும். இவ்வகையில் புள்ளி என்பது இவர்கள் குலத்துள் மிகப் பொருளுள்ளதாகின்றது.
புள்ளிக்குரிய ஆண் இறந்த சூழலில், அவரது மனைவி வாழும் நிலையில் அவர் அரைப்புள்ளியாக கருதப்பட்டு அவரிடம் வரிப்பணம் முதலியன அரையளவில் பெறப்பெறுகின்றன. மனைவி இறந்து கணவர் மட்டும் இருக்கும் சூழலில் அவர் ஒரு புள்ளியாகவே கருதப்படுகிறார். சாதி மாற்றி திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் இப்புள்ளி என்னும் நிலைக்கு வாரார் என்பது கருதத்தக்கது. இவ்வாறு நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபினர் தமக்கென தனித்த தமிழ் வழிப்பட்ட காரணகாரியமிக்க இனஉணர்வுடைய முறைப்பெயர்களை அமைத்துக் கொண்டு தம் பண்பாட்டை நாகரீகத்தை குலமரபைக் காத்து வருகின்றனர்.