Monday, December 26, 2011

நாட்டுக்கோட்டைச் செட்டியார்

நன்றி :கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கு உரித்தாக்குகிறேன் 


பூர்வீக வரலாறு

கிட்டத்தட்ட ஐயாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சமூகம் நகரத்தார்கள்.காலத்திற்கேற்ற புதிய பரிமாணமும்,எந்தச்சூழ்நிலையிலும் தமது சமூகம் வளர்த்து பெருமை காத்த இவர்களது பரிணாம வளர்ச்சியும் போற்றுதலுக்குரியது.இவர்கள் ஆதியில் நாக நாட்டில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படும் இந்த மக்கள் கலியுகம் பிறந்து 204ம் வருடத்தில் காஞ்சி மாநகரம் குறும்பர்கள் வசம் இருந்த போது அங்கு குடியேறிருக்கிறார்கள்.கால மாற்றத்தால் குறும்பர்கள் வசமிருந்த காஞ்சி மண்டலம் தொண்டை மண்டலமானது.

[தொகு]தொண்டை மன்னனும் நகரத்தாரும்

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
என்ற குறளுக்கேற்ப தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் அருமை உணர்ந்த தொண்டை மன்னன் நகரத்தார் மக்களை நன்கு உபசரித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொடுத்து தன் நாட்டிலேயே நிலைப்படுத்திக்கொண்டான்.தன வைசியர்களான இவர்கள் பொன்,ரத்தின வணிகத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். தொண்டை மண்டலம் உலகப் புகழ்பெற்ற வணிக மையமாகவும் நல்லாட்சி நடந்து வந்த அரசு எனவும் வரலாறு கூறுகிறது.ஒவ்வொரு புகழ் பெற்ற அரச வம்சாவளியும் மண்மூடிப்போனதற்கு மிக முக்கியமான காரணம் கொடுங்கோன்மை புல்லுருவிகள் தான். அப்படி ஒரு புல்லுருவியாக பிரதாபன் என்னும் கொடுங்கோலன் சிம்மாசனமேற நகரத்தார்களின் நிம்மதி பறிபோனது.வணிக ரீதியான அநீதிகளைப் பொறுக்க முடியாது,2108 வருடங்கள் வாழ்ந்து செழிப்பாக்கிய காஞ்சி மண்ணை விட்டு 8000 நகரத்தார் குடும்பங்களும் தெற்கு நோக்கி புறப்பட்டு சோழ நாட்டிற்கு வந்தார்கள்.

[தொகு]சோழ நாட்டில் நகரத்தார்கள்

சோழ நாடு விவசாயத்தில் சிறந்து தொழிலில் பின் தங்கியிருக்கவே அப்போது சோழநாட்டை ஆண்ட மனுநீதிச்சோழன் என்னும் அறிவிற் சிறந்த நீதிமானானவன் நகரத்தார்களின் வருகையால் மிக்க மகிழ்ந்து வரவேற்று இவர்கள் குடியிருக்க காவிரிப்பூம்பட்டினத்தில் கிழக்கு,மேற்கு,தெற்குத் தெருக்கள் ஒதுக்கிவிடப்பட்டு அரச வம்சத்திற்கு மகுடம் சூட்டுகிற உரிமை தந்து 'மகுட வைசியர்' என்ற பட்டமும் தந்து கௌரவமாக நடத்தப்பட்டார்கள்.இவர்களது மாளிகையில் தங்கக்கலசம் வைத்துக்கொள்ள அனுமதி தந்து சிங்கக்கொடிவிருதும் தந்து சிறப்பித்ததாக வரலாறு கூறுகிறது.அரசு கஜானாக்களை விட இவர்களிடம் மிகுந்த செல்வமிருந்ததாகத் தெரிகிறது.ஒரு கலையிலோ,தொழிலிலோ நிகரற்றவர்களுக்கு அறிகுறியாக சிங்கக் கொடிவிருது தரப்படுவதும்,செல்வத்தில் யாருக்கும் நிகரற்றவர்களுக்கு அடையாளமாக தங்கக்கலசம் வைக்க அனுமதிப்பதும் அரச மரபு என்பதிலிருந்து இவர்களின் செல்வ நிலையும், தொழில் மேன்மையும் அறிந்து கொள்ள முடிகிறது.
பூவந்திச்சோழன் என்னும் அரசன் நகரத்தார் சமூகப் பெண்களுக்கு தீவினை செய்யத் துணிய தங்கள் ஆண்பிள்ளைகள் 1502 பேரையும்,அவர்களது அனைத்துச்செல்வத்தையும் உபாத்தியாயராய் இருந்த ஆத்மநாத சாஸ்திரியாரிடத்தில் ஒப்புவித்து,சிசு பரிபாலனமும் மரகத விநாயகர் பூசையும் செய்விக்கச்செய்து மானம் காக்கும் பொருட்டு 8000 குடும்ப மக்களும் பிராணஹானி (தீயில் விழுந்து தற்கொலை செய்தல்) செய்துகொண்டார்கள்.
பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்து வரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள் இருந்தார்கள்.
பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழிய வேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம்.

[தொகு]பாண்டிய நாட்டில் நகரத்தார்

பாண்டிய தேசத்து சௌந்தரபாண்டிய அரசன் தமது அரசாங்கத்தில் நற்குடி வேண்டி சோழ மன்னனிடத்தில் வேண்ட,அப்படியே அனுப்பி வைப்பதாக உறுதியளித்து நகரத்தார் சிலரை பாண்டிய தேசம் போயிருக்கும்படி வேண்ட அவர்களோ "எங்கிருந்தாலும் நாங்கள் பிரியாதிருப்போம் என்றும்,தாங்கள் நடத்திவந்தபடி பாண்டிய மன்னனும் மன்னிணை மரியாதை தந்து,அபிமானமாய் சம்ரக்ஷணை செய்வதாய் தங்கள் முன்னால் உறுதியளித்தால் நாங்கள் போகச்சித்தமாயிருக்கிறொம்" என்று கூற சோழ மன்னன் முன் பாண்டிய மன்னன் உறுதியளித்து நகரத்தார் மக்கள் பாண்டிய தேசம் வந்தது வரலாறு.காரைக்குடி அதனைச்சுற்றியுள்ள 74 கிராமங்களில் இவர்கள் தங்கள் குடியிருப்பை அமர்த்திகொண்டனர்.இவர்கள் சைவ நெறியைக் கடைப்பிடிப்பவர்கள்.தீட்சையும்,உபதேசம் பெற்று சிவபூசை நித்தம் செய்பவர்கள்.சிவபூசை எடுத்தவர்கள் புலால் உண்ண மாட்டார்கள்.மூன்று வேளாளப் பெண்களை மணந்த நகரத்தார் காலப்போக்கில் மூன்று பிரிவாகி ஒவ்வொரு பிரிவிற்கும் அரியூர்,சுந்தரப்பட்டினம்,இளையாற்றங்குடி நகரங்களும்,ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு கோவில் வீதம் சுந்தரப்பட்டினம் கோவில்,இளையாற்றங்குடிக்கோவில்,பிரான்மலைக்கோவிலும் விட்டுக்கொடுத்து கூட வந்த குருஸ்தானங்களுக்கும் க்ஷேத்திர சுவாத்தியங்களும் விட்டு,சகல மரியாதையும் பாண்டியமன்னர் செய்ததாக நகரத்தார் வரலாறு கூறுகிறது.

[தொகு]உறவுமுறைப் பெயர்கள்

ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகிpன்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள் குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள், என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது.
பார்க்க முதன்மைக் கட்டுரை: நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்

[தொகு]தொழில்துறை வளர்ச்சி

1950ல் தமிழ் நாட்டிலுள்ள தொழில்களில் மூன்றில் ஒரு பகுதி நாட்டுக் கோட்டை செட்டிமார் கையிருந்ததாகச் செய்தி. நாட்டுக்கோட்டை செட்டிமாருடைய மொத்த ஜனத்தொகை அன்று 1½ லட்சம். 3 கோடி ஜனத்தொகையுள்ள தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தொழிலை ஒன்றரை லட்சம் ஜனத் தொகையுள்ள செட்டிமார் பெற்றது எப்படி? அவர்கள் குடும்பங்களில் அன்று ஒரு பழக்கம் இருந்தது. எவ்வளவு பணக்காரனானாலும் தன் பிள்ளைகளை மற்றவர்கள் கடைகளில் விட்டுப் பயிற்சி கொடுப்பது வழக்கம். முதல் பயிற்சி முடிந்தால் பையன் அரைக்கால் ஆள் ஆகிறான். அதிலிருந்து 8 கட்டம் தாண்டி முழு ஆளான பின் தன் சொந்தக்கடைக்கு வருகிறான். பிறரிடம் வேலை செய்வதால், செல்லம் கொடுக்க வழியில்லை. பயிற்சியில் எல்லா கட்டங்களும் உண்டு. பணம், பொருள், நிர்வாகம், கீழ்ப்படிதல், கணக்கு, வாடிக்கை, கொள்முதல் என எல்லாப் பகுதிகளுக்கும் பயிற்சியுண்டு. இது போன்ற முறையான பயிற்சியை தங்கள் நிறுவனத்தை விட்டு அகன்று பிள்ளைகள் பெற ஏற்பாடு செய்தது இந்தச் சமூகம் ஒன்றுதான். அவர்களுடைய நிறுவனங்கள் திவாலாவதில்லை. அவர்கள் செல்வம் அளவு கடந்து பெருகியதற்கு இப்பயிற்சியை ஏற்றுக் கொண்டதே காரணம். அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது இப் பயிற்சியாகும்.
நாட்டுக் கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் சிதம்பரம் கோயிலின் பல திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. செட்டி நாட்டு ராஜாவான சர் அண்ணாமலைச் செட்டியார், அவரின் சகோதரர் திவான் ராமசாமிச் செட்டியார் போன்றவர்களும், நாலு கோபுரங்களின் திருப்பணிகள், கனகசபையின் கூரையை மறு செப்பனிடுதல், சுற்றுச் சுவர்களைச் செப்பனிடுதல், பிரகாரங்களில் கல்லால் ஆன பாதை அமைத்தல், சிவகங்கைக் குளத்துப் படிக்கட்டுகளைக் கல்லால் செப்பனிடுதல், திரு வீதி உலாவுக்கான வாகனங்களைச் செய்து அளித்தல், விளக்குகள், பாத்திரங்கள் போன்ற முக்கியமான தேவைகளை அளித்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்து மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகமும் செய்து வைத்ததாயும் தெரிய வருகின்றது. 1891-ல் இவை நடந்ததற்குப் பின்னர் கிட்டத் தட்ட 64 வருடங்கள் சென்ற பின்னரே 1955-ல் திரு ரத்னசபாபதிப் பிள்ளையும், திரு ரத்னசாமிச் செட்டியாரின் முயற்சியாலும் கும்பாபிஷேகம் செய்யப் பட்டதாயும் தெரிய வருகின்றது.

No comments:

Post a Comment