Sunday, November 16, 2014

தெரிந்து கொள்வோம்..!!! நகரத்தார்கள் பற்றி






தெரிந்து கொள்வோம்..!!!

ஆனந்த விகடன் டிசம்பர் 2011 ஆம் ஆண்டு நகரத்தார்கள் பற்றி வெளியிட்ட ஒரு தொகுப்பு. - Part 1

அது வருடம் 1850. தமிழகத்தின் கடற்கரை பிரதேசமான ராமநாதபுரத்திலிருந்து ஒன்றிரண்டு கப்பல்கள் புறப்பட்டு, கிழக்கு நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தன. மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், தொழில் செய்வதற்குத் தேவையான பணம், ஆட்கள் என சீறிவரும் அலைகளை உடைத்து எறிந்தபடி சென்று கொண்டிருந்தன அந்தக் கப்பல்கள்.
இத்தனைக்கும் பிரிட்டிஷ்காரர்களோ, பிரெஞ்சுக் காரர்களோ அந்த காலத்தில் பயன்படுத்தி வந்த நவீன கப்பல் கருவிகள் எதுவும் அவர்களிடம் இல்லை. திசை காட்டும் கருவி இல்லை. ஒரு இடத்திற்கு மிகச் சரியாக எப்படி போய் சேருவது என்கிற வரைபடம் இல்லை. இதற்கு முன்பு இலங்கைக்குச் சென்று வந்ததுதான் அந்தக் கப்பலில் இருந்தவர்களின் உச்ச பட்ச கடல் பயண அனுபவம்.
ஆனாலும், அவர்களிடம் நிறைய நம்பிக்கை இருந்தது. திட்டமிட்டபடி புதிய பிரதேசத்திற்குப் பத்திரமாக போய்ச் சேர முடியும். அங்கு நிறைய பணம் சேர்க்க முடியும் என்கிற உறுதி அவர்களிடம் நிறையவே இருந்தது. இந்த கனவை நனவாக்குவதற்குரிய உழைப்பும் அறிவும் அவர்களிடம் அள்ள அள்ளக் குறையாமல் இருந்தது.
இந்த நம்பிக்கையும், உறுதியும், உழைப்பும்தான் காரைக்குடியில் இருந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களை ராமநாதபுரம் கடற்பரப்பிலிருந்து பர்மாவை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருந்தது.
இந்த கடல் பயணம் செய்வதற்கு முன்னால், பல ஆயிரம் ஆண்டுகளாகவே வணிகம் ஒன்றையே தங்கள் குலத் தொழிலாகச் செய்து வந்தவர்கள் நகரத்தார்கள் என்பது அந்த சமூகத்தின் வரலாற்றைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தாலே புரியும்.
நாகபுரியைச் சேர்ந்தவர்கள்!
நகரத்தார்களின் பூர்வீகம் நாக நாட்டில் உள்ள சாந்தியாபுரி என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த நாக நாடு என்று அழைக்கப்பட்ட இடம் இப்போது என்ன பெயரில் அழைப்படுகிறது என்பதற்கான தெளிவான பதில் இல்லை. சிலர், இன்று மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் போபால் ஒரு காலத்தில் நாகர் தேசம் என அழைக்கப்பட்டதாகவும், இன்னும் சிலர் ஆந்திராவில் நாகர் என்கிற ஒரு பிரதேசம் இருந்ததாகவும் சொல்கின்றனர். இன்னும் சிலர், நாகநாடு என்பது இப்போதுள்ள சுமத்திரா தீவுதான் என்றும் சொல்கின்றனர். எது நாக நாடு என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் இனிமேல் உறுதிபடுத்த வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே, நாக நாட்டு மன்னன் செய்த கொடுமையால் நகரத்தார்கள் அங்கிருந்து புறப்பட்டு, காஞ்சிபுரத்தை வந்தடைந்தனர். பிறப்பிலேயே வைசியர்களாக இருக்கும் நகரத்தார்கள் காஞ்சிபுரத்திற்கு வந்தடைந்த பிறகு அங்கு வியாபாரம் தழைத் தோங்க ஆரம்பித்தது; செல்வம் கொழிக்கத் தொடங்கியது.
ஆனால், பிற்பாடு வந்த பிரதாபன் என்கிற மன்னன் நகரத்தார்களை கொடுமைப்படுத்துகிற மாதிரி பல சட்டதிட்டங்களை கொண்டுவர, மேற்கொண்டு தொழில் செய்ய முடியாதபடிக்கு துவண்டு போனார்கள்.
அந்த காலகட்டத்தில் காஞ்சிபுரம், சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், காஞ்சிபுரத்தில் இருந்த நகரத்தார்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த வணிகர்களுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நகரத்தார்கள் மூலம் காவிரிப்பூம் பட்டினத்திற்கு எப்படி எல்லாம் வருமானம் சேருகிறது என்பது மன்னன் மனுநீதிச் சோழனுக்கே தெரிந்திருந்தது.
வியாபாரத்தில் சிறந்து விளங்கும் நகரத்தார் சமூகத்தினரை காவிரிப்பூம் பட்டினத்திலேயே ஏன் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நினைத்தான் மனுநீதிச் சோழன்.
எனவே, நகரத்தார் சமூகத்து மக்களை காவிரிப்பூம் பட்டினத்திற்கு வந்து இருக்கும்படி அழைப்பு விடுத்தான். இதனைத் தொடர்ந்து பெருமளவிலான நகரத்தார்கள் முதன் முதலாக காவிரிப்பூம் பட்டினத்திற்கு வந்து வாழ ஆரம்பித்தனர்.
சோழ மண்டலத்திற்கு வந்த சில காலத்திலேயே, நகரத்தார்களின் தொழில் திறமையை மதுரையை ஆண்டுவந்த பாண்டிய மன்னனும் அறிந்து கொண்டான். இப்படிப்பட்ட வணிகர்கள் நம் நாட்டில் இல்லையே என்கிற ஏக்கம் பாண்டிய மன்னனிடம் பிறந்தது. ஒரு நாட்டில் இல்லாத ஒன்று பக்கத்து நாட்டில் இருந்தால் அதை கேட்டுப் பெறுகிற நடைமுறை அப்போதே சோழ நாட்டுக்கும், பாண்டிய நாட்டுக்கும் இருந்தது.
பாண்டிய மன்னன் சோழ மன்னனிடமிருந்து பலவற்றை ஆட்களை அனுப்பி கேட்டு வாங்கினான். ஆனால், தொழில் திறமை கொண்ட நகரத்தார் சமூகத்தினரில் சிலரையாவது தங்கள் நாட்டுக்குத் தரவேண்டும் என்பதைக் கேட்க, சவுந்தர பாண்டியன் என்கிற மன்னனே சோழ மன்னனான மனுநீதி சோழனை நேரில் சந்தித்துக் கேட்டான். அரசனே நேரில் வந்து கேட்கும் போது இல்லை என்று சொல்ல முடியுமா?
மன்னன் மனுநீதிச் சோழன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த நகரத்தாரில் ஒரு பகுதியினர் மதுரை நோக்கி புறப்பட்டனர்.
இந்த சமயத்தில் பூவந்தி சோழன் என்கிற மன்னன் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் மீது மையல் கொள்ள, அதற்கு ஒட்டுமொத்த நகரத்தார் சமூகமே எதிர்ப்பு தெரிவிக்க, நிம்மதி இழந்து தவித்தனர். எனவே, காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்து கிளம்பி, மதுரை நோக்கி குடிபெயர ஆரம்பித்தனர்.
ஆனால், இம்முறை அவர்கள் பாண்டிய மன்னனின் தலைநகரான மதுரையில் வசிக்க விரும்பவில்லை. மன்னனுக்கு மிக நெருக்கமாக இருந்தால் பல வகையிலும் பிரச்னைக்குள்ளாக வேண்டி இருக்கிறது. எனவே, கொஞ்சம் தள்ளியே இருப்போம் என்று மதுரையிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் இருக்கும் ஓங்காரக் குடியை தேர்வு செய்தனர். இந்த ஓங்காரக்குடிதான் காரக்குடி என்று மருவி, தற்போது காரைக்குடியாக இருக்கிறது.
'(ராமநாதபுரம்) கடலுக்கு மேற்கே, வைகைக்கு வடக்கே, பிரான்மலைக்குக் கிழக்கே, வெள்ளாற்றுக்கு தெற்கே’ அமைந்த இன்றைய சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள்தான் நகரத்தாரின் பூர்வீக பூமியாக அழைக்கப்படும் செட்டி நாடு. இந்த நாட்டில் பிறந்த எந்த நகரத்தாரும் யாரிடமும் கூலி வேலை செய்வதில்லை. இவர்களுக்குத் தெரிந்ததெல்லாமே வியாபாரம் மட்டுமே. முத்து, பவளம், வைரம் போன்ற விலை உயர்ந்த ரத்தினக் கற்களை விற்பதில் ஆரம்பித்து, இவர்கள் செய்யாத தொழில்களே இல்லை.
தொழில் வளர்ச்சி காரணமாக ஒரு காலகட்டத்தில் இவர்களிடம் நிறைய பணம் சேர, பணத்தைக் கடனாக கொடுத்து வட்டிக்கு விடும் தொழிலையும் செய்தனர். 1930-ம் ஆண்டு வாக்கில் எடுத்த புள்ளி விவரங்களின்படி பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் வட்டித் தொழில் நடத்தி வந்ததன் மூலம் நகரத்தார்கள் செய்திருந்த முதலீடு சுமார் 200 கோடி ரூபாய்!
நகரத்தார் குலத்தில் பிறந்ததில் பெருமிதம் அடைகிறேன்.

-இவன்
நாம் நகரத்தார்

Saturday, November 1, 2014

நிலத்தடி நீரை சேமிப்போம்





இந்திய நகரங்கள் பலவும் தற்போது நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தவிக் கின்றன. தண்ணீரைத் தேடி ராட்சத துளையிடும் எந்திரங்கள் மூலம் பல்லாயிரம் அடிக்கு துளையிட்டாலும் காற்றுதான் வருகிறது. பூமியின் அடிப்பகுதியில் இருந்து பல லட்சம் லிட்டர் நீரை நாம் நாள்தோறும் உறிஞ்சுகிறோம். அதில் 75 சதவீதத்தை கழிவு நீராக மாற்றுகிறோம்.
பூமிக்குள் இருந்து எடுக்கும் நீரில் 4ல் 3 பங்கையாவது  மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். அப்படி நடந்தால் பூமிக்கடியில் இருந்து எப்போதும் தண் ணீர் கிடைக்கும். அதற்கு 2 வழிகள் உள்ளன. முதலாவது மழை நீரை சேமிப் பது, அடுத்தது நிலத்தடியில் இருந்து எடுத்த நீரை, மீண்டும் அங்கேயே சேர்ப்பது. மழைநீர் சேமிப்பு என்பது பூமியின் அடிப்பகுதியில் உள்ள உவர்ப்பு நீரை யும் நன்னீராக மாற்றும். தண்ணீரில் தாது உப்புக்களின் கூட்டுத் தொகை அதிகபட்சம் 500 மில்லி கிராம் இருக்க வேண்டும். அது அதிகரித்தால் நீர் உவர்ப்பாக மாறும்.
இது தொடர்பான ஆய்வின் முடி வுகள் நமது நாட்டில் பெரும்பாலும் நிலத்தடியில் உவர்ப்பு நீர்தான் உள்ளதாக கூறுகிறது. இதனை மழைநீர் சேமிப்பின் மூலம் சரி செய்யலாம்.
அடுத்ததாக நாம் பயன்படுத்திய நீரை மீண்டும் சுத்திகரித்து நிலத்தடியில் செலுத்துவது, கூழாங்கற்கள், ஆற்று மணல், நிலக்கரி, சரளைக்கற்கள் வழி யாக நாம் பயன்படுத்திய நீரை செலுத் தினால் அது பெருமளவு கத்திகரிக்கப் படும். ஒவ்வொரு வீட்டிலும் அதிக செலவு இல்லாமல் இதனை அமைக் கலாம். வீடுகளின் குளியல் அறையில் இருந்து வெளியேறும் நீரை இதுபோல சுத்திகரித்து நிலத்தடியில் சேர்க்கலாம்.
அத்துடன் மழைநீரை சுத்தமான தொட்டிகளில் சேகரித்து குடிநீராக பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் பற்றாக் குறை அதிகம் உள்ள பகுதிகளில் மழை நீரை பெரிய கலன்களில் சேமித்து அதில் தேத்தான் கொட்டை என்ற ஒரு தாவர விதையை போட்டு மூடி வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துகிறார் கள். தேத்தான் கொட்டையின் தன்மை யினால் மழைநீர் அதன் தன்மை மாறாமல் இருக்கும்.
குழந்தைகளின் எதிர்காலம் கருதி பணம், பொருட்களை பலரும் சேமிக் கின்றனர். ஆனால் அவர்களுக்கு நீரும் தேவை என்பதை உணர மறுக்கின்றனர். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் கருத்தின்படி நிலத்தடியில் நீரை சேமிக்கா விட்டால் நமது சந்ததி களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பது மறுக்க முடியாத உண்மை.
-  தகவல்: சீ. இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45


கண்ணதாசன் சொன்ன கதை..!




கண்ணதாசன் சொன்ன கதை...
(இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ற கதை)
எமதர்மன் சித்திரகுப்தனிடம் ‘இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்து விடு’’ என்று சொன்னான்.
அது போல் சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக் கொண்டு வந்தான்.
அறுத்த பின்னாலும் சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில நாக்குகள் மரத்துப் போய் இரு கூராகப் பிளந்து கிடந்தன.
‘’மரத்துப் போய் இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் யாருடயவை?’’ என்று கேட்டான் எமதர்மன்.
‘இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் ஆளும் கடசிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு! துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகளெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு!’ என்றான் சித்திரகுப்தன்.
‘’ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள்?’’ என்று கேட்டான் எமன்.
‘’அவர்களுக்கு ஓட்டுப போட்டவர்களுடைய நாக்குகள்’ என்று அமைதியாகச் சொன்னான் சித்திரகுப்தன்